தொடக்கம் | ||
63. திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து
|
||
678. |
எரி ஆர் மழு ஒன்று ஏந்தி, அங்கை இடுதலையே கலனா, வரி ஆர் வளையார் ஐயம் வவ்வாய், மா நலம் வவ்வுதியே? சரியா நாவின் வேதகீதன், தாமரை நான்முகத்தன், பெரியான், பிரமன் பேணி ஆண்ட பிரமபுரத்தானே! |
உரை |
679. |
பியல் ஆர் சடைக்கு ஓர் திங்கள் சூடி, பெய் பலிக்கு என்று, அயலே கயல் ஆர் தடங்கண் அம் சொல் நல்லார் கண் துயில் வவ்வுதியே? இயலால் நடாவி, இன்பம் எய்தி, இந்திரன் ஆள் மண்மேல் வியல் ஆர் முரசம் ஓங்கு செம்மை வேணுபுரத்தானே! |
உரை |
680. |
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர் சடை மாட்டு, அயலே பகலாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், பாய் கலை வவ்வுதியே? அகலாது உறையும் மா நிலத்தில் அயல் இன்மையால், அமரர் புகலால் மலிந்த பூம் புகலி மேவிய புண்ணியனே! |
உரை |
681. |
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில் ஒர் தாழ்குழையன், அம் கோல்வளையார் ஐயம் வவ்வாய், ஆய்நலம் வவ்வுதியே? செங்கோல் நடாவிப் பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய, வெங் கோத் தருமன் மேவி ஆண்ட வெங்குரு மேயவனே! |
உரை |
682. |
தணி நீர் மதியம் சூடி, நீடு தாங்கிய தாழ்சடையன், பிணி நீர் மடவார் ஐயம் வவ்வாய், பெய் கலை வவ்வுதியே? அணி நீர் உலகம் ஆகி எங்கும் ஆழ்கடலால் அழுங்க, துணி நீர் பணிய, தான் மிதந்த தோணிபுரத்தானே! |
உரை |
683. |
கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ் சடை மாட்டு, அயலே அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே? அவர் பூண் அரையர்க்கு ஆதி ஆய அடல் மன்னன் ஆள் மண்மேல் தவர் பூம் பதிகள் எங்கும் ஓங்கும் தங்கு தராயவனே! |
உரை |
684. |
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன் கடை மாட்டு அயலே, நிலையாப் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், நீ நலம் வவ்வுதியே? தலை ஆய்க் கிடந்து இவ் வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய், சிலையால் மலிந்த சீர்ச் சிலம்பன் சிரபுரம் மேயவனே! |
உரை |
685. |
“எருதே கொணர்க!” என்று ஏறி, அங்கை இடு தலையே கலனா, கருது ஏர் மடவார் ஐயம் வவ்வாய், கண் துயில் வவ்வுதியே? ஒரு தேர் கடாவி ஆர் அமருள் ஒருபது தேர் தொலையப் பொரு தேர் வலவன் மேவி ஆண்ட புறவு அமர் புண்ணியனே! |
உரை |
686. |
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை இலாச் சமணும், கவர் செய்து உழலக் கண்ட வண்ணம், காரிகை வார் குழலார் அவர் பூம் பலியோடு ஐயம் வவ்வாய், ஆய் நலம் வவ்வுதியே? தவர் செய் நெடுவேல் சண்டன் ஆளச் சண்பை அமர்ந்தவனே! |
உரை |
687. |
நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு மெய் பூசி, நல்ல குழல் ஆர் மடவார் ஐயம் வவ்வாய், கோல்வளை வவ்வுதியே? அழல் ஆய் உலகம் கவ்வை தீர, ஐந்தலை நீள் முடிய கழல் நாகஅரையன் காவல் ஆகக் காழி அமர்ந்தவனே! |
உரை |
688. |
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று இவர் காண்பு அரிய சிட்டார் பலி தேர்ந்து, ஐயம் வவ்வாய், செய் கலை வவ்வுதியே? நட்டார் நடுவே நந்தன் ஆள, நல்வினையால் உயர்ந்த கொட்டாறு உடுத்த தண்வயல் சூழ் கொச்சை அமர்ந்தவனே! |
உரை |
689. |
கடை ஆர் கொடி நல் மாட வீதிக் கழுமல ஊர்க் கவுணி நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன்-நல்ல படை ஆர் மழுவன்மேல் மொழிந்த பல்பெயர்ப்பத்தும் வல்லார்க்கு அடையா, வினைகள் உலகில் நாளும்; அமருலகு ஆள்பவரே. |
உரை |