67. திருப்பழனம் - தக்கேசி
 
723. கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.
உரை
   
724. பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.
உரை
   
725. உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்
பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.
உரை
   
726. குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.
உரை
   
727. வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.
உரை
   
728. பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி
செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.
உரை
   
729. மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.
உரை
   
730. கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.
உரை
   
731. கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,
வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.
உரை
   
732. வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.
உரை