71. திருநறையூர்ச் சித்தீச்சுரம் - தக்கேசி
 
765. பிறை கொள் சடையர்; புலியின் உரியர்; பேழ்வாய் நாகத்தர்;
கறை கொள் கண்டர்; கபாலம் ஏந்தும் கையர்; கங்காளர்
மறை கொள் கீதம் பாடச் சேடர் மனையில் மகிழ்வு எய்தி,
சிறை கொள் வண்டு தேன் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
766. பொங்கு ஆர் சடையர்; புனலர்; அனலர் பூதம் பாடவே,
தம் காதலியும் தாமும் உடன் ஆய்த் தனி ஓர் விடை ஏறி,
கொங்கு ஆர் கொன்றை வன்னி மத்தம் சூடி, குளிர்பொய்கைச்
செங்கால் அனமும் பெடையும் சேரும் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
767. முடி கொள் சடையர்; முளை வெண்மதியர்; மூவா மேனிமேல்
பொடி கொள் நூலர்; புலியின் அதளர் புரிபுன் சடை தாழ,
கடி கொள் சோலை வயல் சூழ் மடுவில் கயல் ஆர் இனம் பாயக்
கொடி கொள் மாடக்குழாம் ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
768. பின் தாழ் சடைமேல் நகுவெண்தலையர்; பிரமன் தலை ஏந்தி,
மின் தாழ் உருவில் சங்கு ஆர் குழைதான் மிளிரும் ஒரு காதர்
பொன் தாழ் கொன்றை, செருந்தி, புன்னை, பொருந்து, செண்பகம்,
சென்று ஆர் செல்வத் திரு ஆர் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
769. நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
770. நீண்ட சடையர்; நிரை கொள் கொன்றை விரை கொள் மலர்மாலை
தூண்டு சுடர் பொன் ஒளி கொள் மேனிப் பவளத்து எழிலார் வந்து
ஈண்டு மாடம், எழில் ஆர் சோலை, இலங்கு கோபுரம்,
தீண்டு மதியம் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
771. குழல் ஆர் சடையர்; கொக்கின் இறகர்; கோல நிற மத்தம்
தழல் ஆர் மேனித் தவள நீற்றர்; சரி கோவணக்கீளர்
எழில் ஆர் நாகம் புலியின் உடைமேல் இசைத்து, விடை ஏறி,
கழல் ஆர் சிலம்பு புலம்ப, வருவார் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
772. கரை ஆர் கடல் சூழ் இலங்கை மன்னன் கயிலைமலை தன்னை
வரை ஆர் தோளால் எடுக்க, முடிகள் நெரிந்து மனம் ஒன்றி
உரை ஆர் கீதம் பாட, நல்ல உலப்பு இல் அருள் செய்தார்
திரை ஆர் புனல் சூழ் செல்வ நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
773. நெடியான் பிரமன் நேடிக் காணார் நினைப்பார் மனத்தாராய்,
அடியார் அவரும் அருமா மறையும் அண்டத்து அரரும்
முடியால் வணங்கிக் குணங்கள் ஏத்தி, “முதல்வா, அருள்!” என்ன,
செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
774. நின்று உண் சமணர், இருந்து உண் தேரர் நீண்ட போர்வையார்,
ஒன்றும் உணரா ஊமர் வாயில் உரை கேட்டு உழல்வீர்காள்!
கன்று உண் பயப்பால் உண்ண முலையில், கபாலம் அயல் வழிய,
சென்று உண்டு ஆர்ந்து சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.
உரை
   
775. குயில் ஆர் கோல மாதவிகள், குளிர் பூஞ்சுர புன்னை,
செயில் ஆர் பொய்கை, சேரும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரை,
மயில் ஆர் சோலை சூழ்ந்த காழி மல்கு சம்பந்தன்,
பயில்வார்க்கு இனிய, பாடல் வல்லார் பாவம் நாசமே.
உரை