72. திருக்குடந்தைக்காரோணம் - தக்கேசி
 
776. வார் ஆர் கொங்கை மாது ஓர் பாகம் ஆக, வார்சடை,
நீர் ஆர் கங்கை திங்கள் சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர் ஆர் மழு ஒன்று ஏந்தி, அம் தண் குழகன்-குடமூக்கில்,
கார் ஆர் கண்டத்து எண்தோள் எந்தை, காரோணத்தாரே.
உரை
   
777. முடி ஆர் மன்னர், மடமான் விழியார், மூ உலகும் ஏத்தும்
படியார்; பவள வாயார் பலரும் பரவிப் பணிந்து ஏத்த,
கொடி ஆர் விடையார் மாட வீதிக் குடந்தை, குழகு ஆரும்
கடி ஆர் சோலைக் கலவமயில் ஆர் காரோணத்தாரே.
உரை
   
778. மலையார் மங்கைபங்கர், அங்கை அனலர் மடல் ஆரும்
குலை ஆர் தெங்கு, குளிர் கொள் வாழை, அழகு ஆர் குட மூக்கில்
முலையார் அணி பொன், முளை வெண் நகையார், மூவா மதியினார்,
கலை ஆர் மொழியார், காதல் செய்யும் காரோணத்தாரே.
உரை
   
779. போது ஆர் புனல் சேர் கந்தம் உந்திப் பொலிய அழகு ஆரும்
தாது ஆர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் புறவில், அம் தண் குட மூக்கில்
மாது ஆர் மங்கை பாகம் ஆக மனைகள் பலி தேர்வார்,
காது ஆர் குழையர், காளகண்டர் காரோணத்தாரே.
உரை
   
780. பூ ஆர் பொய்கை அலர் தாமரை, செங்கழுநீர், புறவு எல்லாம்
தேவு ஆர் சிந்தை அந்தணாளர் சீரால் அடி போற்ற,
கூ ஆர் குயில்கள், ஆலும் மயில்கள், இன்சொல் கிளிப்பிள்ளை,
கா ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் குடந்தைக் காரோணத்தாரே.
உரை
   
781. மூப்பு ஊர் நலிய நெதி ஆர் விதி ஆய், முன்னே அனல் வாளி
கோப்பார், பார்த்தன் நிலை கண்டு அருளும் குழகர், குடமூக்கில்
தீர்ப்பார், உடலில் அடுநோய் அவலம் வினைகள் நலியாமை;
காப்பார், காலன் அடையா வண்ணம்; காரோணத்தாரே.
உரை
   
782. ஊன் ஆர் தலை கை ஏந்தி உலகம் பலி தேர்ந்து உழல் வாழ்க்கை,
மான் ஆர் தோலார்; புலியின் உடையார்; கரியின் உரி போர்வை
தேன் ஆர் மொழியார் திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்,
கான் ஆர் நட்டம் உடையார், செல்வக் காரோணத்தாரே.
உரை
   
783. வரை ஆர் திரள் தோள் மதவாள் அரக்கன் எடுப்ப மலை, சேரும்
விரை ஆர் பாதநுதியால் ஊன்ற, நெரிந்து சிரம் பத்தும்,
உரை ஆர் கீதம் பாடக் கேட்டு, அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரை ஆர் பொன்னி சூழ் தண் குடந்தைக் காரோணத்தாரே.
உரை
   
784. கரிய மாலும் செய்ய பூமேல் அயனும் கழறிப் போய்,
அரிய அண்டம் தேடிப் புக்கும் அளக்க ஒண்கிலார்,
தெரிய அரிய தேவர் செல்வம் திகழும் குடமூக்கில்,
கரிய கண்டர், காலகாலர், காரோணத்தாரே.
உரை
   
785. நாணார் அமணர்; நல்லது அறியார்; நாளும் குரத்திகள்,
பேணார் தூய்மை; மாசு கழியார்; பேசேல், அவரோடும்!
சேண் ஆர் மதி தோய் மாடம் மல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம் ஒன்று உடையார் குடந்தைக் காரோணத்தாரே.
உரை
   
786. கரு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆர் செல்வக் காரோணத்தாரை,
திரு ஆர் செல்வம் மல்கு சண்பைத் திகழும் சம்பந்தன்
உரு ஆர் செஞ்சொல்மாலை இவைபத்து உரைப்பார், உலகத்துக்
கரு ஆர் இடும்பைப் பிறப்பு அது அறுத்து, கவலை கழிவாரே.
உரை