74. திருப்புறவம் - தக்கேசி
 
798. நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
799. உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
800. பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,
அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,
எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
801. நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
802. செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
803. பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
804. உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
805. விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
806. நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
807. ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.
உரை
   
808. பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.
உரை