75. திருவெங்குரு - குறிஞ்சி
 
809. காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி, கைதொழு மாணியைக்
                                                             கறுத்த வெங்காலன்,
ஓலம் அது இட, முன் உயிரொடு மாள உதைத்தவன்; உமையவள்
                                                             விருப்பன்; எம்பெருமான்-
மாலை வந்து அணுக, ஓதம் வந்து உலவி, மறிதிரை சங்கொடு
                                                             பவளம் முன் உந்தி,
வேலை வந்து அணையும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவி
                                                             உள் வீற்றிருந்தாரே.
உரை
   
810. பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும்
                                                             அரவினை அணிந்து, அழகு ஆகப்
பண்ணினைப் பாடி ஆடி, முன் பலி கொள் பரமர் எம் அடிகளார்
                                                             பரிசுகள் பேணி,
மண்ணினை மூடி, வான்முகடு ஏறி, மறிதிரை கடல் முகந்து எடுப்ப,
                                                             மற்று உயர்ந்து
விண் அளவு ஓங்கி வந்து இழி கோயில் வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
811. ஓர் இயல்பு இல்லா உருவம் அது ஆகி, ஒண்திறல் வேடனது
                                                             உரு அது கொண்டு,
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் கறுத்து, அவற்கு அளித்து,
                                                             உடன் காதல் செய் பெருமான்-
நேரிசை ஆக அறுபதம் முரன்று, நிரை மலர்த் தாதுகள் மூச,
                                                             விண்டு உதிர்ந்து,
வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
812. வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம்
                                                             எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி
                                                             குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய்
                                                             புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
813. சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம்
                                                             இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை
                                                             கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும்
                                                             அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு தம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
814. கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய
                                                             சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள்
                                                             அறத் துரப்ப, எண்திசையும்
புரை மலி வேதம் போற்று சுரர்கள் புரிந்தவர் நலம் கொள்
                                                             ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி
                                                             உள் வீற்றிருந்தாரே.
உரை
   
815. வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை மறுகிட வரு
                                                             மதகளிற்றினை மயங்க
ஒல்லையில் பிடித்து, அங்கு உரித்து, அவள் வெருவல்
                                                             கெடுத்தவர்; விரிபொழில் மிகு திரு ஆலில்
நல் அறம் உரைத்து ஞானமோடு இருப்ப, நலிந்திடல் உற்று
                                                             வந்த அக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி, வெங்குரு மேவி
                                                             உள் வீற்றிருந்தாரே.
உரை
   
816. பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று எடுப்ப, பலதலை
                                                             முடியொடு தோள் அவை நெரிய,
ஓங்கிய விரலால் ஊன்றி, அன்று, அவற்கே ஒளி திகழ் வாள்
                                                             அது கொடுத்து, அழகு ஆய
கோங்கொடு, செருந்தி, கூவிளம், மத்தம், கொன்றையும், குலாவிய
                                                             செஞ்சடைச் செல்வர்
வேங்கை பொன்மலர் ஆர் விரை தரு கோயில் வெங்குரு மேவி
                                                             உள் வீற்றிருந்தாரே.
உரை
   
817. ஆறு உடைச் சடை எம் அடிகளைக் காண, அரியொடு பிரமனும்
                                                             அளப்பதற்கு ஆகி,
சேறு இடை, திகழ் வானத்து இடை, புக்கும் செலவு அறத்
                                                             தவிர்ந்தனர்; எழில் உடைத் திகழ் வெண்
நீறு உடைக் கோல மேனியர்; நெற்றிக்கண்ணினர்; விண்ணவர்
                                                             கைதொழுது ஏத்த,
வேறு எமை ஆள விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
818. பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர், பயில்தரும் மற உரை
                                                             விட்டு, அழகு ஆக
ஏடு உடை மலராள் பொருட்டு வன்தக்கன் எல்லை இல்
                                                             வேள்வியைத் தகர்த்து, அருள்செய்து,
காடு இடைக் கடிநாய் கலந்து உடன் சூழ, கண்டவர் வெரு உற
                                                             விளித்து, வெய்து ஆய
வேடு உடைக் கோலம் விரும்பிய விகிர்தர் வெங்குரு மேவி உள்
                                                             வீற்றிருந்தாரே.
உரை
   
819. விண் இயல் விமானம் விரும்பிய பெருமான் வெங்குரு மேவி
                                                             உள் வீற்றிருந்தாரை,
நண்ணிய நூலன்-ஞானசம்பந்தன்-நவின்ற இவ் வாய்மொழி நலம்
                                                             மிகு பத்தும்
பண் இயல்பு ஆகப் பத்திமையாலே பாடியும் ஆடியும் பயில
                                                             வல்லார்கள்,
விண்ணவர் விமானம் கொடுவர ஏறி, வியன் உலகு ஆண்டு
                                                             வீற்றிருப்பவர் தாமே.
உரை