76. திருஇலம்பையங்கோட்டூர் - குறிஞ்சி
 
820. மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர்
                                                   மறைக்காடு, நெய்த் தானம்,
நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
                                                   உகந்து ஏறிய நிமலன்-
கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம்
                                                   பெடை புல்கிக் கணமயில் ஆலும்
இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
                         இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
821. திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்
                              தலைமகன், திருக்கழிப்பாலை
நிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு
                              உகந்து ஏறிய நிமலன்-
கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலை
                              இளையவர் மதிமுகத்து உலவும் 
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் 
                              பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
822. பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்று
                                        உதைத்து அடியவர்க்கு அருளும்
காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக, கனல் எரி அங்கையில்
                                                             ஏந்திய கடவுள்
நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது
                                                             விண்டு ஓங்கும்
ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
                                        என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
823. உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும்
                                         அண்ணாமலை அண்ணல்,
விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத்
                                                             தாங்கிய விமலன்-
குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி
                          எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,
இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                        பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
824. தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடு
                                        நீர் உடன் வாயு ஆம் தெரியில்
வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்கு
                                        அசைத்து உழிதரு மைந்தன்-
கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர்
                                        கல் கடுஞ்சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
                                        என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
825. மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலி
                                        திரிந்து உண்பு இலான், மற்று ஓர்
தனம் இலான், எனது உரை தனது உரை ஆக, தாழ்சடை இளமதி
                                        தாங்கிய தலைவன்-
புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணி
                                        கொழித்து, ஈண்டி வந்து, எங்கும்
இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப்
                           பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
826. நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து
                                        உளான், நித்தமா ஏத்தும்
ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு
                                        உகந்து ஏறிய ஒருவன்-
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை
                                        வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                      பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
827. வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள்
                                        அடர்த்தவன், உலகில்
ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவு
                                        அணிந்து உழி தரும் அண்ணல்
வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல்
                                                             அம் கானல்,
ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                         பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
828. கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடி
                              மேல்முடி தேர்ந்து அளக்கில்லா,
உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல்
                              அங்கையில் ஏந்திய ஒருவன்-
வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு 
                                           மணி அணி மாலை,
இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
                      பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
829. உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும்
                                                    சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்கு
                              என்று உழல் பெரியவர் பெருமான்-
கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முக
                              வண்டொடு தேன் இனம் முரலும்,
இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,
                              என் எழில் கொள்வது இயல்பே?
உரை
   
830. கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர்
                                                   கழுமலம் என்னும்
நந்தியார் உறை பதி நால்மறை நாவன்-நல்-தமிழ்க்கு இன்துணை,
                                                             ஞானசம்பந்தன்-
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய
                                        பத்தும் வல்லார், போய்
வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று,
                                                   வீடு எளிது ஆமே.
உரை