77. திருஅச்சிறுபாக்கம் - குறிஞ்சி
 
831. பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு
                                                   அழல் நிறம் புரைய,
குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண்
                                         நூலொடு கொழும்பொடி அணிவர்;
மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை 
                                                   ஓர்பாகமாப் பேணி,
அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
832. தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம்
                                                   திருவடி தொழுவார்
ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர்,
                                                   ஒன்று அலாது ஊரார்,
வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர்
                                                   வடிவினை உடையார்,
ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
833. கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை
                                         கொண்டு அரிவை மேல் ஓடி,
நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து
                                                   ஏறிய நிமலர்;
பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்;
                                                   பேய்க்கணம் சூழ
ஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
834. "மைம்மலர்க்கோதை மார்பினர்" எனவும், "மலைமகள் அவளொடு
                                                   மருவினர்" எனவும்,
"செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர்,
                                                   எம் சென்னிமேல் உறைவார்"
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும்
                                                   தாள் நிழல் சேர,
அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
835. "விண் உலாம் மதியம் சூடினர்" எனவும், "விரிசடை உள்ளது,
                                                   வெள்ளநீர்" எனவும்,
"பண் உலாம் மறைகள் பாடினர்" எனவும், "பல புகழ் அல்லது
                                                   பழி இலர்" எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில்
                                                   பெற நின்ற
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
836. நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு,
                                                             நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்;
                                                             தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது
                                                             ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி
                                                             கொண்டாரே.
உரை
   
837. ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடு
                                                  ஒருங்கு உடன் ஆகிக்
கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும்
                                                             கூவிளமலரும்
நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும்
                                                             இவை நலம் பகர,
ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                             ஆட்சி கொண்டாரே.
உரை
   
838. கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக்
                                                   கவரியும் குடையும்
பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப்
                                                   பெரியவர் பேண,
பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்த
                                        திண்தோள்களை அடர்வித்து,
அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
839. நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு
                                                   ஏந்திய மாலைக்
கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர்
                                                   இயல்பினை உடையார்;
தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு
                                                   முடி உற, தங்கள்
ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
                                                   ஆட்சி கொண்டாரே.
உரை
   
840. வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய
                                                   வல்வினையாளர்,
ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர்
                                                   இயல்பினை உடையார்;
வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல
                                                   மா மதி போல்
ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி
                                                   கொண்டாரே.
உரை
   
841. மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
                               பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப்பதியவர் அதிபதி
                                        கவுணியர் பெருமான்,
கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை
                               ஞானசம்பந்தன்-தமிழ் கொண்டு,
அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர்
                                        அருவினை இலரே.
உரை