தொடக்கம் | ||
79. திருக்கழுமலம் - குறிஞ்சி
|
||
853. |
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல்
அரவமும் மதியமும் விரவிய அழகர்; மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்; பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர் கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
854. |
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு
முடி உறைபவர்; படுதலைக் கையர்; பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலே வண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல்-திரை கொணர்ந்து எற்றிய கரைமேல் கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. |
உரை |
855. |
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி
இடை மூன்றினர்; நால் மறையாளர்; மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை; எட்டு இருங்கலை சேர் பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ, மதனனை வெகுண்ட கண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
856. |
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்;
ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித் திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி, வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்த கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. |
உரை |
857. |
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக
உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்; பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம் நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு, ஒண்மணி வரன்றி, கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. |
உரை |
858. |
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி
உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த, பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில் பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி, கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
859. |
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார்,
குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம் மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள் முத்து என அரும்ப, கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
860. |
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன்,
பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள் பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும் வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன, இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
861. |
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை
தடுத்தோனும், வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம் பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறைகோயில் மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி, வெள் இப்பியும் சுமந்து, கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே. |
உரை |
862. |
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு
இலாச் சமணரும், தேரரும், கணி சேர் நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச் சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி வையகத்து ஏற்று, காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே. |
உரை |
863. |
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம்
கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல், வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர்வரும் கலை ஞானசம்பந்தன் தமிழின் ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல் மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே. |
உரை |