84. திருநாகைக்காரோணம் - குறிஞ்சி
 
904. புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல் பாய
நனையும் சடைமேல் ஓர் நகுவெண் தலை சூடி,
வினை இல் அடியார்கள் விதியால் வழிபட்டு,
கனையும் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
905. பெண் ஆண் என நின்ற பெம்மான், பிறைச் சென்னி
அண்ணாமலை நாடன், ஆரூர் உறை அம்மான்-
மண் ஆர் முழவு ஓவா மாடம் நெடுவீதிக்
கண் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
906. பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி, அடியார்க்கு அருள் செய்தான்;
தேர் ஆர் விழவு ஓவாச் செல்வன்-திரை சூழ்ந்த
கார் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
907. மொழி சூழ் மறை பாடி, முதிரும் சடைதன்மேல்
அழி சூழ் புனல் ஏற்ற அண்ணல் அணிஆய
பழி சூழ்விலர் ஆய பத்தர் பணிந்து ஏத்த,
கழி சூழ் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
908. ஆணும் பெண்ணும் ஆய் அடியார்க்கு அருள் நல்கி,
சேண் நின்றவர்க்கு இன்னம் சிந்தைசெய வல்லான்-
பேணி வழிபாடு பிரியாது எழும் தொண்டர்
காணும் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
909. ஏனத்து எயிறோடும் அரவம் மெய் பூண்டு,
வானத்து இளந்திங்கள் வளரும் சடை அண்ணல்
ஞானத் துறை வல்லார் நாளும் பணிந்து ஏத்த,
கானல் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
910. அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
911. வலம் கொள் புகழ் பேணி, வரையால் உயர் திண்தோள்
இலங்கைக்கு இறை வாட அடர்த்து, அங்கு அருள்செய்தான்-
பலம் கொள் புகழ் மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,
கலம் கொள் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
912. திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஏத்த,
பெருமான் என நின்ற பெம்மான்; பிறைச் சென்னிச்
செரு மால்விடை ஊரும் செல்வன்-திரை சூழ்ந்த
கருமால் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
913. நல்லார் அறம் சொல்ல, பொல்லார் புறம்கூற,
அல்லார் அலர் தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்;
பல் ஆர் தலைமாலை அணிவான்-பணிந்து ஏத்த,
கல் ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.
உரை
   
914. கரை ஆர் கடல் நாகைக்காரோணம் மேய
நரை ஆர் விடையானை நவிலும் சம்பந்தன்
உரை ஆர் தமிழ்மாலை பாடும் அவர் எல்லாம்
கரையா உரு ஆகிக் கலி வான் அடைவாரே.
உரை