85. திருநல்லம் - குறிஞ்சி
 
915. “கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!” என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
916. தக்கன் பெரு வேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர் பொன்சடை தாழ,
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
917. அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
918. குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ,
மிளிரும் அரவோடு வெண் நூல் திகழ் மார்பில்,
தளிரும் திகழ்மேனித் தையல் பாகம் ஆய்,
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே.
உரை
   
919. மணி ஆர் திகழ் கண்டம் உடையான்; மலர் மல்கு
பிணி வார்சடை எந்தை பெருமான்; கழல் பேணித்
துணிவு ஆர் மலர்கொண்டு தொண்டர் தொழுது ஏத்த,
நணியான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
920. “வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
சும் சுடுநீறு புனைந்தான், விரிகொன்றை
ஈசன்!” என உள்கி எழுவார் வினைகட்கு
நாசன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
921. அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
உரை
   
922. பெண் ஆர் திருமேனிப் பெருமான்; பிறை மல்கு
கண் ஆர் நுதலினான்; கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை இறையே விரல் ஊன்றி,
நண்ணார் புரம் எய்தான்-நல்லம் நகரானே.
உரை
   
923. நாகத்து அணையானும் நளிர் மா மலரானும்
போகத்து இயல்பினால் பொலிய, அழகு ஆகும்
ஆகத்தவளோடும் அமர்ந்து, அங்கு அழகு ஆரும்
நாகம் அரை ஆர்த்தான்-நல்லம் நகரானே.
உரை
   
924. குறி இல் சமணோடு, குண்டர்வண் தேரர்,
அறிவு இல் உரை கேட்டு, அங்கு அவமே கழியாதே!
பொறி கொள் அரவு ஆர்த்தான்-பொல்லாவினை தீர்க்கும்,
நறை கொள் பொழில் சூழ்ந்த, நல்லம் நகரானே.
உரை
   
925. நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலை சேர் மழுவானை, கொச்சை அமர்ந்து ஓங்கு
தலம் ஆர் தமிழ் ஞானசம்பந்தன், சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே.
உரை