88. திருஆப்பனூர் - குறிஞ்சி
 
948. முற்றும் சடை முடி மேல் முதிரா இளம்பிறையன்,
ஒற்றைப் பட அரவம் அது கொண்டு அரைக்கு அணிந்தான்,
செற்றம் இல் சீரானைத் திரு ஆப்பனூரானைப்
பற்றும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
949. குரவம் கமழ் குழலாள் குடி கொண்டு நின்று, விண்ணோர்
விரவும் திருமேனி, விளங்கும் வளை எயிற்றின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
950. முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன்
பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின்
அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப்
பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
951. பிணியும் பிறப்பு அறுப்பான், பெருமான், பெருங்காட்டில்
துணியின் உடை தாழச் சுடர் ஏந்தி ஆடுவான்,
அணியும் புனலானை, அணி ஆப்பனூரானைப்
பணியும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
952. தகரம் அணி அருவித் தடமால்வரை சிலையா,
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான்,
அகரமுதலானை, அணி ஆப்பனூரானைப்
பகரும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
953. ஓடும் திரிபுரங்கள் உடனே உலந்து அவிய,
காடு அது இடம் ஆகக் கனல் கொண்டு நின்று இரவில்
ஆடும் தொழிலானை, அணி ஆப்பனூரானைப்
பாடும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
954. இயலும் விடை ஏறி, எரி கொள் மழு வீசி,
கயலின் இணைக்கண்ணாள் ஒருபால் கலந்து ஆட,
இயலும் இசையானை, எழில் ஆப்பனூரானைப்
பயிலும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
955. கருக்கும் மணிமிடறன், கதநாகக்கச்சையினான்,
உருக்கும் அடியவரை, ஒளிவெண்பிறைசூடி,
அரக்கன் திறல் அழித்தான், அணி ஆப்பனூரானைப்
பரு(க்)கும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
956. கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
957. செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.
உரை
   
958. அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.
உரை