தொடக்கம் | ||
100. திருப்பரங்குன்றம் - குறிஞ்சி
|
||
1080. |
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில் ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம் பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே. |
உரை |
1081. |
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து, பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து, திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே. |
உரை |
1082. |
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி, பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே. |
உரை |
1083. |
வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக் குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம், தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம், நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே. |
உரை |
1084. |
பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத் துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே. |
உரை |
1085. |
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத் தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில் புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்- படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே. |
உரை |
1086. |
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால் எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும் மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை, பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே. |
உரை |
1087. |
மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்- பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச் சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் “சிவன்” என்று நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே. |
உரை |
1088. |
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும், சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி, பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே! |
உரை |
1089. |
குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து, மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல; பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத் தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே. |
உரை |
1090. |
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன், படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத் தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி, விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே. |
உரை |