தொடக்கம் | ||
101. திருக்கண்ணார்கோயில் - குறிஞ்சி
|
||
1091. |
தண் ஆர் திங்கள், பொங்கு அரவம், தாழ்புனல், சூடி, பெண் ஆண் ஆய பேர் அருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட்கு, இடர்பாவம் நண்ணா ஆகும்; நல்வினை ஆய நணுகுமே. |
உரை |
1092. |
கந்து அமர் சந்தும், கார் அகிலும், தண்கதிர் முத்தும், வந்து அமர் தெண் நீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டி, கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆட, குளிர் வண்டு செந்து இசை பாடும் சீர் திகழ் கண்ணார்கோயிலே. |
உரை |
1093. |
“பல் இயல் பாணிப் பாரிடம் ஏத்த, படுகானில் எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம்” என்பர் கொல்லையின் முல்லை, மல்லிகை, மௌவல், கொடி பின்னி, கல் இயல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார்கோயிலே. |
உரை |
1094. |
தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம், மருவளர் கோதை அஞ்ச, உரித்து, மறை நால்வர்க்கு உரு வளர் ஆல் நீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார் கரு வளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே. |
உரை |
1095. |
மறு மாண் உரு ஆய் மற்று இணை இன்றி, வானோரைச் செறு மாவலிபால் சென்று, உலகு எல்லாம் அளவிட்ட குறு மாண் உருவன், தற்குறியாகக் கொண்டாடும் கறு மா கண்டன் மேயது கண்ணார்கோயிலே. |
உரை |
1096. |
விண்ணவருக்கு ஆய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக உண்ணவனை, தேவர்க்கு அமுது ஈந்து, எவ் உலகிற்கும் கண்ணவனை, கண்ணார் திகழ் கோயில் கனிதன்னை, நண்ண வல்லோர்கட்கு இல்லை, நமன்பால் நடலையே. |
உரை |
1097. |
“முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனிசாபம், பின் ஒரு நாள் அவ் விண்ணவர் ஏத்த, பெயர்வு எய்தி, தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு” என்பர் கன்னியர் நாளும் துன் அமர் கண்ணார் கோயிலே. |
உரை |
1098. |
“பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக்கீழால் நெருக்குண்ணா, தன் நீள்கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த, முருக்குண்ணாது ஓர் மொய் கதிர் வாள், தேர், முன் ஈந்த திருக்கண்ணார்” என்பார் சிவலோகம் சேர்வாரே. |
உரை |
1099. |
செங்கமலப் போதில்-திகழ் செல்வன் திருமாலும் அங்கு அமலக் கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் தங்கு அமலக் கண்ணார் திகழ்கோயில் தமது உள்ளத்து அங்கு அமலத்தோடு ஏத்திட, அண்டத்து அமர்வாரே. |
உரை |
1100. |
தாறு இடு பெண்ணைத் தட்டு உடையாரும், தாம் உண்ணும் சோறு உடையார், சொல்-தேறன்மின்! வெண்நூல் சேர் மார்பன், ஏறு உடையன், பரன், என்பு அணிவான், நீள் சடை மேல் ஓர் ஆறு உடை அண்ணல், சேர்வது கண்ணார் கோயிலே. |
உரை |
1101. |
காமரு கண்ணார்கோயில் உளானை, கடல் சூழ்ந்த பூ மரு சோலைப் பொன் இயல் மாடப் புகலிக் கோன்- நா மரு தொன்மைத்தன்மை உள் ஞானசம்பந்தன்- பா மரு பாடல்பத்தும் வல்லார் மேல் பழி போமே. |
உரை |