தொடக்கம் | ||
104. திருப்புகலி - வியாழக்குறிஞ்சி
|
||
1122. |
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான், கொன்றை சூடிய செஞ்சடையான், சுடுகாடு அமர்ந்த பிரான், ஏடு அவிழ் மாமலையாள் ஒரு பாகம் அமர்ந்து அடியார் ஏத்த ஆடிய எம் இறை, ஊர் புகலிப்பதி ஆமே. |
உரை |
1123. |
ஏலம் மலி குழலார் இசை பாடி எழுந்து, அருளால் சென்று, சோலை மலி சுனையில் குடைந்து ஆடித் துதி செய்ய, ஆலை மலி புகை போய் அண்டர் வானத்தை மூடி நின்று நல்ல மாலை அது செய்யும் புகலிப்பதி ஆமே. |
உரை |
1124. |
ஆறு அணி செஞ்சடையான்; அழகு ஆர் புரம் மூன்றும் அன்று வேவ, நீறு அணி ஆக வைத்த நிமிர் புன்சடை எம் இறைவன்; பாறு அணி வெண் தலையில் பகலே “பலி” என்று வந்து நின்ற வேறு அணி கோலத்தினான்; விரும்பும் புகலி அதே. |
உரை |
1125. |
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார் புரங்கள் மூன்றும் கொள்ள எரி மடுத்தான், குறைவு இன்றி உறை கோயில் அள்ளல் விளை கழனி அழகு ஆர் விரைத் தாமரைமேல் அன்னப் புள் இனம் வைகி எழும் புகலிப்பதிதானே. |
உரை |
1126. |
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர் மலர்க்கொன்றை துன்ற, நட்டம்- ஆடும் அமரர்பிரான், அழகு ஆர் உமையோடும் உடன் வேடுபட நடந்த விகிர்தன், குணம் பரவித் தொண்டர் பாட, இனிது உறையும் புகலிப்பதி ஆமே. |
உரை |
1127. |
மைந்து அணி சோலையின் வாய் மதுப் பாய் வரி வண்டு இனங்கள் வந்து நந்து இசை பாட, நடம் பயில்கின்ற நம்பன் இடம் அந்தி செய் மந்திரத்தால் அடியார்கள் பரவி எழ, விரும்பும் புந்தி செய் நால்மறையோர் புகலிப்பதிதானே. |
உரை |
1128. |
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள் கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன், கருதும் இடம் செங்கயல் வார் கழனி திகழும் புகலிதனைச் சென்று, தம் அம் கையினால்-தொழுவார் அவலம் அறியாரே. |
உரை |
1129. |
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும் நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் பல்லொடு தோள் நெரிய விரல் ஊன்றி, பாடலுமே, கை வாள் ஒல்லை அருள் புரிந்தான் உறையும் புகலி அதே. |
உரை |
1130. |
தாது அலர் தாமரை மேல் அயனும் திருமாலும் தேடி ஓதியும் காண்பு அரிய உமைகோன் உறையும் இடம் மாதவி, வான் வகுளம், மலர்ந்து எங்கும் விரை தோய, வாய்ந்த போது அலர் சோலைகள் சூழ் புகலிப்பதிதானே. |
உரை |
1131. |
வெந் துவர் மேனியினார், விரி கோவணம் நீத்தார், சொல்லும் அந்தர ஞானம் எல்லாம் அவை ஓர் பொருள் என்னேல்! வந்து எதிரும் புரம் மூன்று எரித்தான் உறை கோயில் வாய்ந்த புந்தியினார் பயிலும் புகலிப்பதிதானே. |
உரை |
1132. |
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது ஏத்த, மிகு வாசப்- போதனைப் போல் மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை, ஞானம் மிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே. |
உரை |