107. திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வியாழக்குறிஞ்சி
 
1152. வெந்த வெண் நீறு அணிந்து, விரிநூல் திகழ் மார்பில் நல்ல
பந்து அணவும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்து அருளி,
கொந்து அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.
உரை
   
1153. அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
உரை
   
1154. பால் அன நீறு புனை திருமார்பில், பல்வளைக்கை நல்ல
ஏலமலர்க் குழலாள் ஒருபாகம் அமர்ந்து அருளி,
கோல மலர்ப்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநல் மாமிடற்றான் கழல ஏத்தல் நீதியே.
உரை
   
1155. வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில், நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கதநாகம் பூண்டு அருளி,
சீர் உறும் அந்தணர் வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீர் உறு செஞ்சடையான் கழல் ஏத்தல் நீதியே.
உரை
   
1156. பொன் திகழ் ஆமையொடு புரிநூல் திகழ் மார்பில், நல்ல
பன்றியின் கொம்பு அணிந்து, பணைத்தோளி ஓர்பாகம் ஆக,
குன்று அன மாளிகை சூழ் கொடி மாடச் செங்குன்றூர், வானில்
மின்திகழ் செஞ்சடையான் கழல் ஏத்தல் மெய்ப்பொருளே.
உரை
   
1157. ஓங்கிய மூஇலை நல் சூலம் ஒரு கையன், சென்னி
தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கு அணிந்து,
கோங்கு அணவும் பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள் தொழுவார் வினை ஆய பற்று அறுமே.
உரை
   
1158. நீடு அலர்கொன்றையொடு நிமிர்புன் சடை தாழ, வெள்ளை-
வாடல் உடை தலையில் பலி கொள்ளும் வாழ்க்கையனாய்,
கோடல் வளம் புறவில் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள் தொழுவார் வினை ஆய தேயுமே.
உரை
   
1159. மத்த நல் மாமலரும் மதியும் வளர் கொன்றை உடன் துன்று
தொத்து அலர் செஞ்சடைமேல்-துதைய உடன் சூடி,
கொத்து அலர் தண்பொழில் சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.
உரை
   
1160. செம்பொனின் மேனியன் ஆம் பிரமன் திருமாலும் தேட நின்ற
அம் பவளத்திரள் போல் ஒளி ஆய ஆதிபிரான்,
கொம்பு அணவும் பொழில் சூழ் கொடி மாடச்செங்குன்றூர் மேய
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே.
உரை
   
1161. போதியர் பிண்டியர் என்று இவர்கள் புறம் கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரை கேட்டு உழல்வீர்! வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
வேதியனைத் தொழ, நும் வினை ஆன வீடுமே.
உரை
   
1162. அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.
உரை