108. திருப்பாதாளீச்சுரம் - வியாழக்குறிஞ்சி
 
1163. மின் இயல் செஞ்சடைமேல் விளங்கும் மதி மத்தமொடு நல்ல
பொன் இயல் கொன்றையினான்; புனல் சூடி; பொற்பு அமரும்
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி; நாளும்
பன்னிய பாடலினான்; உறை கோயில்-பாதாளே.
உரை
   
1164. நீடு அலர் கொன்றையொடு நிரம்பா மதி சூடி; வெள்ளைத்-
தோடு அமர் காதில் நல்ல குழையான்; சுடு நீற்றான்;
ஆடு அரவம் பெருக அனல் ஏந்திக் கை வீசி, வேதம்
பாடலினால் இனியான்; உறை கோயில் பாதாளே.
உரை
   
1165. நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம்
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான்,
தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே.
உரை
   
1166. அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.
உரை
   
1167. பேய் பலவும் நிலவப் பெருங்காடு அரங்கு ஆக உன்னி நின்று,
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்து,
தேய்பிறையும் அரவும் பொலி கொன்றைச் சடைதன் மேல் சேர,
பாய் புனலும் உடையான் உறை கோயில் பாதாளே.
உரை
   
1168. கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும்
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும்
பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.
உரை
   
1169. விண்டு அலர் மத்தமொடு மிளிரும் இள நாகம், வன்னி, திகழ்
வண்டு அலர் கொன்றை, நகு மதி, புல்கு வார்சடையான்;
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்து, உரை வேதம் நான்கும் அவை
பண்டு இசைபாடலினான்; உறை கோயில் பாதாளே.
உரை
   
1170. மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக, அன்று, கையால்-
தொல்லைமலை எடுத்த அரக்கன் தலைதோள் நெரித்தான்;
கொல்லை விடை உகந்தான்; குளிர்திங்கள் சடைக்கு அணிந்தோன்;
பல் இசை பாடலினான்; உறை கோயில் பாதாளே.
உரை
   
1171. தாமரைமேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால்-தேடி,
காமனை வீடுவித்தான் கழல் காண்பு இலராய் அகன்றார்;
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறை கோயில் பாதாளே.
உரை
   
1172. காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு, அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன்தன் அடியே பரவி,
மாலையில் வண்டு இனங்கள் மது உண்டு இசை முரல, வாய்த்த
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறை கோயில் பாதாளே.
உரை
   
1173. பல்மலர் வைகு பொழில் புடை சூழ்ந்த பாதாளைச் சேர,
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன்-
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
இன் இசைபத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.
உரை