109. திருச்சிரபுரம் - வியாழக்குறிஞ்சி
 
1174. வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
நீர் உறு சடை முடி நிமலன், இடம்
கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர்
சீர் உறு வளவயல் சிரபுரமே.
உரை
   
1175. அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.
உரை
   
1176. பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்
திரிந்தவர் புரம் அவை தீயின் வேவ
வரிந்த வெஞ்சிலை பிடித்து, அடுசரத்தைத்
தெரிந்தவன், வள நகர் சிரபுரமே.
உரை
   
1177. நீறு அணி மேனியன், நீள் மதியோடு
ஆறு அணி சடையினன், அணியிழை ஓர்-
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வளவயல், சிரபுரமே.
உரை
   
1178. அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.
உரை
   
1179. கலை அவன், மறை அவன், காற்றொடு தீ
மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன்,
கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த
சிலையவன், வள நகர் சிரபுரமே.
உரை
   
1180. வான் அமர் மதியொடு மத்தம் சூடித்
தானவர் புரம் எய்த சைவன் இடம்
கான் அமர் மடமயில் பெடை பயிலும்
தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.
உரை
   
1181. மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக்
கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள்
இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன்
செறுத்தவன், வள நகர் சிரபுரமே.
உரை
   
1182. வண்ண நல்மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய்
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல்மதில் அணி சிரபுரமே.
உரை
   
1183. வெற்று அரை உழல்பவர், விரி துகிலார்,
கற்றிலர் அற உரை புறன் உரைக்க,
பற்றலர் திரி புரம் மூன்றும் வேவச்
செற்றவன் வள நகர் சிரபுரமே.
உரை
   
1184. அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.
உரை