110. திருஇடைமருதூர் - வியாழக்குறிஞ்சி
 
1185. மருந்து அவன், வானவர் தானவர்க்கும்
பெருந்தகை, பிறவினொடு இறவும் ஆனான்,
அருந்தவ முனிவரொடு ஆல் நிழல் கீழ்
இருந்தவன், வள நகர் இடைமருதே.
உரை
   
1186. தோற்று அவன் கேடு அவன், துணைமுலையாள்
கூற்றவன், கொல் புலித் தோல் அசைத்த
நீற்றவன், நிறை புனல் நீள் சடைமேல்
ஏற்றவன், வள நகர் இடைமருதே.
உரை
   
1187. படை உடை மழுவினன், பால்வெண் நீற்றன்,
நடை நவில் ஏற்றினன், ஞாலம் எல்லாம்
உடை தலை இடு பலி கொண்டு உழல்வான்-
இடைமருது இனிது உறை எம் இறையே.
உரை
   
1188. பணைமுலை உமை ஒருபங்கன், ஒன்னார்
துணை மதில் மூன்றையும் சுடரில் மூழ்கக்
கணை துரந்து, அடு திறல் காலன் செற்ற
இணை இலி, வள நகர் இடைமருதே.
உரை
   
1189. பொழில் அவன், புயல் அவன், புயல் இயக்கும்
தொழில் அவன், துயர் அவன், துயர் அகற்றும்
கழலவன், கரிஉரி போர்த்து உகந்த
எழிலவன், வள நகர் இடைமருதே
உரை
   
1190. நிறை அவன், புனலொடு மதியும் வைத்த
பொறையவன், புகழ் அவன், புகழ நின்ற
மறை அவன், மறிகடல் நஞ்சை உண்ட
இறையவன், வள நகர் இடைமருதே.
உரை
   
1191. நனி வளர் மதியொடு நாகம் வைத்த
பனி மலர்க் கொன்றை அம் படர் சடையன்,
முனிவரொடு அமரர்கள் முறை வணங்க,
இனிது உறை வள நகர் இடைமருதே.
உரை
   
1192. தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கை மா மதகரி அன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன், வள நகர் இடைமருதே.
உரை
   
1193. பெரியவன், பெண்ணினொடு ஆணும் ஆனான்,
வரி அரவு அணை மறிகடல்-துயின்ற
கரியவன் அலரவன் காண்பு அரிய
எரியவன், வள நகர் இடைமருதே.
உரை
   
1194. சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,
எந்தைதன் வள நகர் இடைமருதே.
உரை
   
1195. இலை மலி பொழில் இடைமருது இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
பலம் மிகு தமிழ் இவைபத்தும் வல்லார்
உலகு உறு புகழினொடு ஓங்குவரே.
உரை