114. திருமாற்பேறு - வியாழக்குறிஞ்சி
 
1228. குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன்,
பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன்,
கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும்
மருந்து அவன், வள நகர் மாற்பேறே.
உரை
   
1229. பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி,
வேறு அணி பலி கொளும் வேட்கையனாய்,
நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த
மாறு இலி வள நகர் மாற்பேறே.
உரை
   
1230. கரு உடையார் உலகங்கள் வேவ,
செரு விடை ஏறி முன் சென்று நின்று,
உரு உடையாள் உமையாளும் தானும்
மருவிய வள நகர் மாற்பேறே.
உரை
   
1231. தலையவன், தலை அணிமாலை பூண்டு
கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான்,
கலை நவின்றான், கயிலாயம் என்னும்
மலையவன், வள நகர் மாற்பேறே.
உரை
   
1232. துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும்
பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன்,
கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற
மறையவன், வள நகர் மாற்பேறே.
உரை
   
1233. பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக்
கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன்,
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.
உரை
   
1234. தீது இலா மலை எடுத்த அரக்கன்
நீதியால் வேத கீதங்கள் பாட,
ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள்
மாதி தன் வள நகர் மாற்பேறே.
உரை
   
1235. செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.
உரை
   
1236. குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும்
களித்து நன் கழல் அடி காணல் உறார்;
முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி
வளைத்தவன் வள நகர் மாற்பேறே.
உரை
   
1237. அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே.
உரை