120. திருஐயாறு - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
 
1293. பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1294. கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்
பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,
போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை
ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1295. வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,
அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1296. வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1297. வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1298. முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்
என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1299. வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1300. விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1301. விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,
எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.
உரை
   
1302. மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா
இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,
தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா
அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!
உரை
   
1303. நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.
உரை