தொடக்கம் | ||
121. திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
|
||
1304. |
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த படை மரு தழல் எழ மழு வல பகவன், புடை மருது இள முகில் வளம் அமர் பொதுளிய, இடை மருது அடைய, நம் இடர் கெடல் எளிதே. |
உரை |
1305. |
மழை நுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை கழை நுழை புனல், பெய்த கமழ் சடைமுடியன்; குழை நுழை திகழ் செவி, அழகொடு மிளிர்வது ஒர் இழை நுழை புரி அணல்; இடம் இடைமருதே. |
உரை |
1306. |
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன், கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன், பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின் இருமையும் உடை அணல், இடம் இடைமருதே. |
உரை |
1307. |
பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன், வரி வளர் குளிர்மதி ஒளி பெற மிளிர்வது ஒர் எரி வளர்சடை அணல், இடம் இடைமருதே. |
உரை |
1308. |
வரு நல மயில் அன மடநடை மலைமகள் பெரு நல முலை இணை பிணைசெய்த பெருமான், செரு நல மதில் எய்த சிவன், உறை செழு நகர் இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே. |
உரை |
1309. |
கலை உடை விரி துகில், கமழ்குழல், அகில்புகை, மலை உடை மடமகள் தனை இடம் உடையோன்; விலை உடை அணிகலன் இலன் என மழுவினொடு இலை உடை படையவன்; இடம் இடைமருதே. |
உரை |
1310. |
வளம் என வளர்வன வரி முரல் பறவைகள் இள மணல் அணை கரை இசைசெயும் இடைமருது உளம் என நினைபவர் ஒலிகழல் இணை அடி, குளம் அணல் உற மூழ்கி, வழிபடல் குணமே. |
உரை |
1311. |
“மறை அவன், உலகு அவன், மதியவன், மதி புல்கு துறையவன்” என வல அடியவர் துயர் இலர்; கறையவன் மிடறு அது, கனல் செய்த கமழ் சடை இறையவன், உறைதரும் இடம் இடைமருதே. |
உரை |
1312. |
மருது இடை நடவிய மணிவணர், பிரமரும் இருது உடை அகலமொடு இகலினர், இனது எனக் கருதிடல் அரியது ஒர் உருவொடு பெரியது ஒர் எருது உடை அடிகள் தம் இடம் இடைமருதே. |
உரை |
1313. |
துவர் உறு விரிதுகில் உடையரும் அமணரும் அவர் உறு சிறுசொலை நயவன்மின்! இடு மணல் கவர் உறு புனல் இடைமருது கைதொழுது எழு- மவர் உறு வினை கெடல் அணுகுதல் குணமே. |
உரை |
1314. |
தட மலி புகலியர் தமிழ் கெழு விரகினன், இடம் மலி பொழில் இடைமருதினை இசை செய்த, படம் மலி, தமிழ் இவை பரவ வல்லவர் வினை கெட, மலி புகழொடு கிளர் ஒளியினரே. |
உரை |