122. திருஇடைமருதூர் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
 
1315. விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில் அவை புனை கணையினில் எய்த
எரிதரு சடையினர், இடைமருது அடைவு உனல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.
உரை
   
1316. “மறிதிரை படு கடல் விடம் அடை மிடறினர்
எறிதிரை கரை பொரும் இடைமருது” எனுமவர்
செறி திரை நரையொடு செலவு இலர், உலகினில்;
பிறிது இரை பெறும் உடல் பெருகுவது அரிதே.
உரை
   
1317. சலசல சொரி புனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறை மறைமொழியினர்,
இலர் என இடு பலியவர், இடைமருதினை
வலம் இட, உடல் நலிவு இலது, உள வினையே.
உரை
   
1318. விடையினர், வெளியது ஒர் தலை கலன் என நனி
கடை கடை தொறு, “பலி இடுக!” என முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடை மருது எனும் நகர்
உடையவர்; அடி இணை தொழுவது எம் உயர்வே.
உரை
   
1319. “உரை அரும் உருவினர், உணர்வு அரு வகையினர்,
அரை பொரு புலி அதள் உடையினர், அதன்மிசை
இரை மரும் அரவினர், இடைமருது” என உளம்
உரைகள் அது உடையவர் புகழ் மிக உளதே.
உரை
   
1320. ஒழுகிய புனல் மதி அரவமொடு உறைதரும்
அழகிய முடி உடை அடிகளது, அறைகழல்
எழிலினர் உறை, இடைமருதினை மலர்கொடு
தொழுதல் செய்து எழுமவர் துயர் உறல் இலரே.
உரை
   
1321. கலை மலி விரலினர், கடியது ஒர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலை இணை மருவிய வடிவினர்,
இலை மலி படையவர், இடம் இடைமருதே.
உரை
   
1322. செருவு அடை இல வல செயல் செய் அத் திறலொடும்
அரு வரையினில் ஒருபது முடி நெரிதர,
இருவகை விரல் நிறியவர் இடைமருது அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே?
உரை
   
1323. அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.
உரை
   
1324. குடை மயிலின தழை மருவிய உருவினர்,
உடை மரு துவரினர், பல சொல உறவு இலை;
அடை மரு திருவினர் தொழுது எழு கழுலவர்
இடை மருது என மனம் நினைவதும் எழிலே.
உரை
   
1325. பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில் இடைமருதினைப்
பரவிய ஒருபது பயில வல்லவர் இடர்
விரவிலர், வினையொடு; வியன் உலகு உறவே.
உரை