123. திருவலிவலம் - திருவிராகம் - வியாழக்குறிஞ்சி
 
1326. பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1327. இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1328. உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1329. அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.
உரை
   
1330. பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1331. தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1332. நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1333. இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.
உரை
   
1334. தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1335. இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.
உரை
   
1336. மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.
உரை