125. திருச்சிவபுரம் - திருவிராகம்
 
1348. கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
முலை மலிதரு திரு உருவம் அது உடையவன்,
சிலை மலி மதில் பொதி சிவபுரநகர் தொழ,
இலை, நலி வினை; இருமையும் இடர் கெடுமே.
உரை
   
1349. படர் ஒளி சடையினன், விடையினன், மதில் அவை
சுடர் எரி கொளுவிய சிவன் அவன், உறை பதி
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய, நம்
இடர் கெடும்; உயர்கதி பெறுவது திடனே.
உரை
   
1350. வரை திரிதர, அரவு அகடு அழல் எழ, வரு
நுரை தரு கடல் விடம் நுகர்பவன்-எழில் திகழ்
திரை பொரு புனல் அரிசில் அது அடை சிவபுரம்
உரை தரும் அடியவர் உயர்கதியினரே.
உரை
   
1351. துணிவு உடையவர்; சுடுபொடியினர்; உடல் அடு
பிணி அடைவு இலர்; பிறவியும் அற விசிறுவர்
திணிவு உடையவர் பயில் சிவபுரம் மருவிய
மணிமிடறனது அடி இணை தொழுமவரே.
உரை
   
1352. மறையவன், மதியவன், மலையவன், நிலையவன்,
நிறையவன், உமையவள் மகிழ் நடம் நவில்பவன்,
இறையவன்-இமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவு என உடையவன், எமை உடையவனே.
உரை
   
1353. முதிர் சடை இளமதி நதிபுனல் பதிவுசெய்து,
அதிர்கழல் ஒலிசெய, அருநடம் நவில்பவன்;
எதிர்பவர் புரம் எய்த இணை இலி; அணை பதி
சதிர் பெறும் உளம் உடையவர் சிவபுரமே.
உரை
   
1354. வடிவு உடை மலைமகள் சலமகள் உடன் அமர்
பொடிபடும் உழை அதள் பொலி திரு உருவினன்,
செடி படு பலி திரி சிவன், உறை சிவபுரம்
அடைதரும் அடியவர் அருவினை இலரே.
உரை
   
1355. கரம் இருபதும் முடி ஒருபதும் உடையவன்
உரம் நெரிதர, வரை அடர்வு செய்தவன், உறை
பரன் என அடியவர் பணிதரு, சிவபுர-
நகர் அது புகுதல் நம் உயர்கதி அதுவே.
உரை
   
1356. “அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்”
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.
உரை
   
1357. புத்தரொடு அமணர்கள் அற உரை புற உரை
வித்தகம் ஒழிகில; விடை உடை அடிகள் தம்
இத் தவம் முயல்வு உறில், இறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
உரை
   
1358. புந்தியர் மறை நவில் புகலி மன் ஞானசம்-
பந்தன தமிழ்கொடு, சிவபுரநகர் உறை
எந்தையை உரைசெய்த இசை மொழிபவர், வினை
சிந்தி முன் உற, உயர்கதி பெறுவர்களே.
உரை