2239. நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர், தண்மதியர்,
                                                   நெற்றிக்கண்ணர்,
கூற்று ஏர் சிதையக் கடிந்தார், இடம்போலும் குளிர் சூழ்
                                                         வெற்பில்,
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி
                                                        பூஞ்சாரல்,
கோல் தேன் இசை முரல, கேளா, குயில் பயிலும்
                                                     குறும்பலாவே.
6
உரை