2.4 திருவான்மியூர் - வினாஉரை - இந்தளம்
 
1502. கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்;
உரை எலாம் பொருள் ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்
வரை உலாம் மடமாது உடன் ஆகிய மாண்புஅதே?
1
உரை
   
1503. சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்
சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர்,
சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்
அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே?
2
உரை
   
1504. கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்
தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,
தோல் நயங்கு அமர் ஆடையினீர்! அடிகேள்! சொலீர்
ஆனைஅங்க உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?
3
உரை
   
1505. மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்
செஞ்சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர்,
துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர்
வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன் அருள் வைத்ததே?
4
உரை
   
1506. மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்
திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர் திரு வான்மியூர்,
துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர்
விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?
5
உரை
   
1507. போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்
தீது இல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,
சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர்! சொலீர்
மூதெயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்புஅதே?
6
உரை
   
1508. வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?
7
உரை
   
1509. தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்
திக்கில் வந்து அலற அடர்த்தீர்! திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்
பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?
8
உரை
   
1510. பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்
திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,
சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்
எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?
9
உரை
   
1511. மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்
செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்
மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர்
கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?
10
உரை
   
1512. மாது ஓர் கூறுஉடை நல் தவனைத் திரு வான்மியூர்
ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரை
ஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.
11
உரை