2.6 திருஐயாறு - இந்தளம்
 
1524. கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்
ஓடு கங்கை, ஒளிவெண்பிறை, சூடும் ஒருவனார்
பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண் ஆகவே
ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.
1
உரை
   
1525. தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,
பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;
துன்னஆடை உடுப்பர்; சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே.
2
உரை
   
1526. கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;
மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;
ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவே
ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.
3
உரை
   
1527. பண்ணின் நல்ல மொழியார், பவளத்துவர்வாயினார்,
எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற
                                                   கண்ணினார்,
வண்ணம் பாடி, வலி பாடி, தம் வாய்மொழி பாடவே,
அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.
4
உரை
   
1528. வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,
வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளி,
ஆன் அஞ்சு, ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே.
5
உரை
   
1529. எங்கும் ஆகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதி சூடு மைந்தனும்,
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும் ஆய்
அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.
6
உரை
   
1530. ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்
சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;
வேதிஆகி, விண் ஆகி, மண்ணோடு எரி காற்றும் ஆய்,
ஆதிஆகி, நின்றானும் ஐயாறு உடை ஐயனே.
7
உரை
   
1531. குரவநாள்மலர்கொண்டு அடியார் வழிபாடுசெய்,
விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே.
பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,
அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே.
8
உரை
   
1532. உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்
வரை செய் தோள் அடர்த்து மதி சூடிய மைந்தனார்;
கரை செய் காவிரியின் வடபாலது காதலான்;
அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே.
9
உரை
   
1533. மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;
கோலம் ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்
ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.
10
உரை
   
1534. கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
                                                   வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.
11
உரை
   
1535. பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,
கலி கடிந்த கையான் கடல்காழியர்காவலன்,
ஒலி கொள் சம்பந்தன் ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள்,
                                                   போய்
மலி கொள் விண் இடை மன்னிய சீர் பெறுவார்களே.
12
உரை