2.8 திருச்சிக்கல் - இந்தளம்
 
1547. வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை,
தேன் உலாவும் மலர்ச்சோலை, மல்கும் திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்பெருமான் அடி
ஞானம் ஆக நினைவார் வினைஆயின நையுமே.
1
உரை
   
1548. மடம் கொள் வாளை குதிகொள்ளும் மணமலர்ப்பொய்கை
                                                   சூழ்,
திடம் கொள் மா மறையோர் அவர் மல்கிய சிக்கலுள்
விடம் கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெருமான் அடி
                                                   மேவிய
அடைந்து வாழும் அடியார் அவர் அல்லல் அறுப்பரே.
2
உரை
   
1549. நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய
சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள்
வேல் ஒண்கண்ணியினாளை ஒர்பாகன்,
                        வெண்ணெய்ப்பிரான்,
பாலவண்ணன், கழல் ஏத்த, நம் பாவம் பறையுமே.
3
உரை
   
1550. கந்தம் உந்தக் கைதை பூத்துக் கமழ்ந்து சேரும் பொழில்
செந்து வண்டு இன் இசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள்
வெந்தவெண்நீற்று அண்ணல், வெண்ணெய்ப்பிரான், விரை
                                                             ஆர் கழல்
சிந்தைசெய்வார் வினைஆயின தேய்வது திண்ணமே.
4
உரை
   
1551. மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு
தெங்கு துங்கப் பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள்
வெங் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்ப்பிரான் அடி
                                                  மேவவே,
தங்கும், மேன்மை; சரதம் திரு, நாளும், தகையுமே.
5
உரை
   
1552. வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!
6
உரை
   
1553. முன்னு மாடம் மதில்மூன்று உடனேஎரிஆய் விழத்
துன்னு வார்வெங்கணை ஒன்று செலுத்திய சோதியான்,
செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
                                                  அடி
உன்னி நீட, மனமே! நினையாய், வினை ஓயவே!
7
உரை
   
1554. தெற்றல் ஆகிய தென் இலங்கைக்கு இறைவன், மலை
பற்றினான், முடிபத்தொடு தோள்கள் நெரியவே,
செற்ற தேவன், நம் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான் அடி
உற்று, நீ நினைவாய், வினைஆயின ஓயவே!
8
உரை
   
1555. மாலினோடு அருமாமறை வல்ல முனிவனும்
கோலினார் குறுக, சிவன் சேவடி கோலியும்
சீலம் தாம் அறியார்; திகழ் சிக்கல் வெண்ணெய்ப்பிரான்
பாலும் பல்மலர் தூவ, பறையும், நம் பாவமே.
9
உரை
   
1556. பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலாக்
கட்டு அமண்கழுக்கள் சொல்லினைக் கருதாது, நீர்,
சிட்டன், சிக்கல் வெண்ணெய்ப்பெருமான், செழுமாமறைப்
பட்டன், சேவடியே பணிமின், பிணி போகவே!
10
உரை
   
1557. கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன், நல்
செந் தண்பூம்பொழில் சிக்கல் வெண்ணெய்ப்பெருமான்
                                                             அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர், வான் இடை
வெந்தநீறு அணியும் பெருமான் அடி மேவரே.
11
உரை