2.19 திருநெல்லிக்கா - இந்தளம்
 
1666. அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
மறத்தால் மதில்மூன்றுஉடன் மாண்பு அழித்த
திறத்தால், தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,
நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
1
உரை
   
1667. பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;
மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;
விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்
நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
2
உரை
   
1668. நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக்
கலம்தான் அது கொண்ட கபாலியும் தான்;
புலம் தான்; புகழால் எரி விண் புகழும்
நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
3
உரை
   
1669. தலைதானது ஏந்திய தம் அடிகள்
கலைதான் திரி காடுஇடம் நாடுஇடம் ஆம்;
மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;
நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
4
உரை
   
1670. தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்
உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்
சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்
நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
5
உரை
   
1671. வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி;
மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;
குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
6
உரை
   
1672. பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;
இறை தான்; இறவாக் கயிலைமலையான்;
மறை தான்; புனல், ஒண்மதி, மல்கு சென்னி
நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
7
உரை
   
1673. மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை;
மிறைத்தான், வரையால், அரக்கன் மிகையைக்
குறைத்தான், சடைமேல் குளிர் கோல்வளையை
நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
8
உரை
   
1674. தழல் தாமரையான், வையம் தாயவனும்,
கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்
அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
9
உரை
   
1675. கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,
"என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்;
மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய
நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.
10
உரை
   
1676. புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின்
நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன,
பகர்வார் அவர் பாவம் இலாதவரே.
11
உரை