2.24 திருநாகேச்சுரம் - இந்தளம்
 
1720. பொன் ஏர்தரு மேனியனே! புரியும்
மின் நேர் சடையாய்! விரை காவிரியின்
நன்நீர் வயல் நாகேச்சுரநகரின்
மன்னே! என, வல்வினை மாய்ந்து அறுமே.
1
உரை
   
1721. சிறவார் புரம்மூன்று எரியச் சிலையில்
உற வார்கணை உய்த்தவனே! உயரும்
நறவு ஆர் பொழில் நாகேச்சுரநகருள்
அறவா! என, வல்வினை ஆசு அறுமே.
2
உரை
   
1722. கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.
3
உரை
   
1723. நகு வான்மதியோடு அரவும் புனலும்
தகு வார்சடையின் முடியாய்! தளவம்
நகு வார் பொழில் நாகேச்சுரநகருள்
பகவா! என, வல்வினை பற்றுஅறுமே.
4
உரை
   
1724. கலைமான்மறியும் கனலும் மழுவும்
நிலைஆகிய கையினனே நிகழும்
நலம் ஆகிய நாகேச்சுரநகருள்
தலைவா! என, வல்வினைதான் அறுமே.
5
உரை
   
1725. குரை ஆர் கழல் ஆட நடம் குலவி,
வரையான்மகள் காண, மகிழ்ந்தவனே!
நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம்
அரைசே! என, நீங்கும், அருந்துயரே.
6
உரை
   
1726. முடை ஆர்தரு வெண்தலை கொண்டு, உலகில்
கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே!
நடை ஆர்தரு நாகேச்சுரநகருள்
சடையா! என, வல்வினைதான் அறுமே.
7
உரை
   
1727. ஓயாத அரக்கன் ஒடிந்து அலற,
நீர் ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே!
வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுரத்
தாயே! என, வல்வினைதான் அறுமே.
8
உரை
   
1728. நெடியானொடு நான்முகன் நேடல் உற,
சுடு மால் எரிஆய் நிமிர் சோதியனே!
நடு மா வயல் நாகேச்சுரநகரே
இடமா உறைவாய்! என, இன்புஉறுமே.
9
உரை
   
1729. மலம் பாவிய கையொடு மண்டைஅது உண்
கலம்பாவியர் கட்டுரை விட்டு, "உலகில்
நலம் பாவிய நாகேச்சுரநகருள்
சிலம்பா!" என, தீவினை தேய்ந்து அறுமே.
10
உரை
   
1730. கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்கோன்
தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன்
நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனைச்
சொலல் மாலைகள் சொல்ல, நிலா, வினையே.
11
உரை