2.30 திருப்புறம்பயம் - திருவிராகம் - இந்தளம்
 
1786. மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை;
நிறம் பசுமை செம்மையொடு இசைந்து, உனது நீர்மை
திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு
அறம்பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய்!
1
உரை
   
1787. விரித்தனை, திருச்சடை; அரிஉத்து ஒழுகு வெள்ளம்
தரித்தனை; அது அன்றியும், மிகப் பெரிய காலன்
எருத்து இற உதைத்தனை; இலங்கிழை ஒர்பாகம்
பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!
2
உரை
   
1788. விரிந்தனை; குவிந்தனை; விழுங்கு உயிர் உமிழ்ந்தனை;
திரிந்தனை; குருந்து ஒசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை; புணர்ந்தனை; பிணம் புகு மயானம்
புரிந்தனை; மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய்!
3
உரை
   
1789. வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க,
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க,
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!
4
உரை
   
1790. பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை; ஒர் பாகம்,
கரும்பொடுபடும்சொலின்மடந்தையை மகிழ்ந்தோய்;
சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே!
5
உரை
   
1791. அனல் படு தடக்கையவர், எத் தொழிலரேனும்,
நினைப்பு உடை மனத்தவர் வினைப்பகையும் நீயே;
தனல் படு சுடர்ச் சடை தனிப் பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்!
6
உரை
   
1792. மறத்துறை மறுத்தவர், தவத்து அடியர், உள்ளம்
அறத்துறை ஒறுத்து உனது அருள்கிழமை பெற்றோர்,
திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும்,
புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்!
7
உரை
   
1793. இலங்கையர் இறைஞ்சு இறை, விலங்கலில் முழங்க
உலம் கெழு தடக்கைகள் அடர்த்திடலும், அஞ்சி,
வலம்கொள எழுந்தவன் நலம் கவின, அஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்!
8
உரை
   
1794. வடம் கெட நுடங்குண இடந்த இடை அல்லிக்
கிடந்தவன், இருந்தவன், அளந்து உணரல் ஆகார்
தொடர்ந்தவர், உடம்பொடு நிமிர்ந்து, உடன்வணங்க,
புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம்
                                                  அமர்ந்தோய்!
9
உரை
   
1795. விடக்கு ஒருவர் நன்று என, விடக்கு ஒருவர் தீது என,
உடற்கு உடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள், பிடக்குஉரை படுத்து, உமை ஒர்பாகம்
அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே!
10
உரை
   
1796. கருங்கழி பொரும் திரை கரைக் குலவு முத்தம்
தரும் கழுமலத்து இறை தமிழ்க் கிழமை ஞானன்
சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்,
பெரும் பிணி மருங்கு அற, ஒருங்குவர், பிறப்பே.
11
உரை