தொடக்கம் |
2.33 திருநள்ளாறு - திருவிராகம் - இந்தளம்
|
|
|
1819. |
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே. |
1 |
|
உரை
|
|
|
|
|
1820. |
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல்,
முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே. |
2 |
|
உரை
|
|
|
|
|
1821. |
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே. |
3 |
|
உரை
|
|
|
|
|
1822. |
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர்,
திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே. |
4 |
|
உரை
|
|
|
|
|
1823. |
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர்
அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே. |
5 |
|
உரை
|
|
|
|
|
1824. |
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே. |
6 |
|
உரை
|
|
|
|
|
1825. |
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர்,
பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே. |
7 |
|
உரை
|
|
|
|
|
1826. |
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே. |
8 |
|
உரை
|
|
|
|
|
1827. |
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம்
எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே. |
9 |
|
உரை
|
|
|
|
|
1828. |
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம்
என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே. |
10 |
|
உரை
|
|
|
|
|
1829. |
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே. |
11 |
|
உரை
|
|
|
|