2.44 திருஆமாத்தூர் - சீகாமரம்
 
1939. துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
பின் அம் சடைமேல் ஓர் பிள்ளைமதி சூடி,
அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்
பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே?
1
உரை
   
1940. கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
"அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்!" என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.
2
உரை
   
1941. பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்
தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.
3
உரை
   
1942. கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள
பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண் ஆகம் காதல் செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண் எல்லாம் காணாத கண்களே
4
உரை
   
1943. பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே
சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,
ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்
வேட நெறி நில்லா வேடமும் வேடமே?
5
உரை
   
1944. சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்
காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,
யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான்,அத்
தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.
6
உரை
   
1945. மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே
7
உரை
   
1946. தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள் ஆதிரை என்றே, நம்பன்தன் நாமத்தால்,
ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே
8
உரை
   
1947. புள்ளும் கமலமும் கைக்கொண்டார்தாம் இருவர்
உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான், எம்
வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே?
9
உரை
   
1948. பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோ சார,
கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்
அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்
நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே?
10
உரை
   
1949. ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,
கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன்
நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்
பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.
11
உரை