2.67 திருப்பெரும்புலியூர் - காந்தாரம்
 
2189. மண்ணும் ஓர் பாகம் உடையார்; மாலும் ஓர்பாகம்
                                                        உடையார்;
விண்ணும் ஓர் பாகம் உடையார்; வேதம் உடைய விமலர்;
கண்ணும் ஓர் பாகம் உடையார்; கங்கை சடையில் கரந்தார்;
பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.
1
உரை
   
2190. துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினார்; ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதிமாலை கலந்த
பின்னுசடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
2
உரை
   
2191. கள்ளம் மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தி,
துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர்; எழில் மிகு
                                                        செல்வர்;
வெள்ளம், நகுதலைமாலை, விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளை மதிப் பெருமானார் பெரும் புலியூர் பிரியாரே.
3
உரை
   
2192. ஆடல் இலையம் உடையார்; அருமறை தாங்கி ஆறு
                                                       அங்கம்
பாடல் இலையம் உடையார்; பன்மை ஒருமை செய்து,
                                                       அஞ்சும்
ஊடு அலில் ஐயம் உடையார்; யோகு எனும் பேர் ஒளி
                                                          தாங்கி,
பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே.
4
உரை
   
2193. தோடு உடையார், குழைக் காதில்; சூடுபொடியார்; அனல்
                                                            ஆடக்
காடு உடையார்; எரி வீசும் கை உடையார்; கடல் சூழ்ந்த
நாடு உடையார்; பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த
பீடு உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
5
உரை
   
2194. கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர்தம்
                                                             கண்;
"முற்று இது அறிதும்" என்பார்கள் முதலியர்; வேதபுராணர்;
"மற்று இது அறிதும்" என்பார்கள் மனத்து இடையார்; பணி
                                                              செய்ய,
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே.
6
உரை
   
2195. மறை உடையார், ஒலிபாடல்; மா மலர்ச்சேவடி சேர்வார்,
குறை உடையார், குறை தீர்ப்பார்; குழகர், அழகர்; நம்
                                                        செல்வர்;
கறை உடையார், திகழ் கண்டம்; கங்கை சடையில்
                                                        கரந்தார்;
பிறை உடையார், சென்னிதன்மேல்; பெரும் புலியூர்
                                                     பிரியாரே.
7
உரை
   
2196. உறவியும் இன்பு உறு சீரும் ஓங்குதல், வீடு எளிது ஆகி,
துறவியும் கூட்டமும் காட்டி, துன்பமும் இன்பமும் தோற்றி,
மறவி அம்சிந்தனை மாற்றி, வாழ வல்லார்தமக்கு என்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே.
8
உரை
   
2197. சீர் உடையார்; அடியார்கள் சேடர்; ஒப்பார்; சடை சேரும்
நீர் உடையார்; பொடிப் பூசும் நினைப்பு உடையார்;
                                                        விரிகொன்றைத்
தார் உடையார்; விடை ஊர்வார்; தலைவர்; ஐந் நூற்றுப்
                                                        பத்து ஆய
பேர் உடையார்; பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
9
உரை
   
2198. உரிமை உடைய அடியார்கள் உள் உற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டி, அருள் செயும் ஆதிமுதல்வர்;
கருமை உடை நெடுமாலும், கடிமலர் அண்ணலும், காணாப்
பெருமை உடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே.
10
உரை
   
2199. பிறை வளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப்
                                                  பெருமானை,
நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
மறை வளரும் தமிழ்மாலை வல்லவர், தம் துயர் நீங்கி,
நிறை வளர் நெஞ்சினர் ஆகி, நீடு உலகத்து இருப்பாரே.
11
உரை