2.74 திருப்பிரமபுரம் - திருக்கோமூத்திரி அந்தாதி - காந்தாரம்
 
2268. பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர், குறைவு இலாப்
                                                     புகலி, பூமேல்
மாமகள் ஊர், வெங்குரு, நல் தோணிபுரம், பூந்தராய்,
                                                   வாய்ந்த இஞ்சிச்
சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை,
                                                   காழி, கொச்சை,
காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம்
                                                 நாம் கருதும் ஊரே.
1
உரை
   
2269. கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த்
                                            தோணிபுரம், கனக மாட
உருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும்
                                                   கொச்சை, காழி,
திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன் ஊர், செங்கமலத்து
                                              அயன் ஊர், தெய்வத்
தருத் திகழும் பொழில் புறவம், சண்பை சடைமுடி
                                            அண்ணல் தங்கும் ஊரே.
2
உரை
   
2270. ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு
                                                   காழி, கொச்சை,
கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த்
                                       தோணிபுரம், கற்றோர் ஏத்தும்
சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர்,
                                                       பூங் கற்பத்
தார் மருவும் இந்திரன் ஊர், புகலி, வெங்குரு கங்கை
                                                 தரித்தோன் ஊரே.
3
உரை
   
2271. தரித்த மறையாளர் மிகு வெங்குரு, சீர்த் தோணிபுரம்,
                                                   தரியார் இஞ்சி
எரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி,
                                           இமையோர் கோன் ஊர்,
தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை,
                                            செழுமறைகள் எல்லாம்
விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் உலகில்
                                                  விளங்கும் ஊரே.
4
உரை
   
2272. விளங்கு அயன் ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம்,
                                                   மேகம் ஏய்க்கும்
இளங் கமுகம் பொழில் தோணிபுரம், காழி, எழில் புகலி,
                                                  புறவம், ஏர் ஆர்
வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச்சிரபுரம்,
                                                வன் நஞ்சம் உண்டு
களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன்(ன்)
                                          உடலம் காய்ந்தோன் ஊரே.
5
உரை
   
2273. காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர்
                                    கழுமலம், மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன் ஊர், இருங் கமலத்து
                                              அயன் ஊர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை,
                                                  காழி, சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை
                                        கெடுத்தோன் திகழும் ஊரே.
6
உரை
   
2274. திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன் ஊர், காழி,
                                                        தேசு ஆர்
மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம் கொச்சை,
                                               புறவம், விண்ணோர்
புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு வெம்போர்
                                                    மகிடற் செற்று,
நிகழ் நீலி, நின்மலன் தன் அடி இணைகள் பணிந்து
                                               உலகில் நின்ற ஊரே.
7
உரை
   
2275. நின்ற மதில் சூழ்தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும்
                                                  வேணு, மன்றில்
ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர்
                                                   புறவம், மோடி
சென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி,
                                               தேவர் கோன் ஊர்,
வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே.
8
உரை
   
2276. மிக்க கமலத்து அயன் ஊர், விளங்கு புறவம், சண்பை,
                                                   காழி, கொச்சை,
தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய்,
                                               சிலம்பன் சேர் ஊர்,
மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு
                                           வல் அரக்கன் திண்தோள்
ஒக்க இருபதும் முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த
                                                    எம்மான் ஊரே.
9
உரை
   
2277. எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன் ஊர், கழுமலம்,
                                                நல் புகலி, என்றும்
பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன் ஊர்,
                                           நல் தோணிபுரம், போர்க்
கைம்மாவை உரிசெய்தோன் காழி, அயன் ஊர், தராய்,
                                                  சண்பை காரின்
மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல் ஆய்
                                      விளங்கிய எம் இறைவன் ஊரே.
10
உரை
   
2278. இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
                                    இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
                                                ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
                                             கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
                                                   அம்மான் ஊரே.
11
உரை
   
2279. அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு,
                                          கொச்சை, புறவம், அம் சீர்
மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம்,
                                                தேவர் கோன் ஊர்,
அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன் ஊர், வழி
                                           முடக்கும் ஆவின்பாச்சல்
தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர்,
                                                  தக்கோர் தாமே.
12
உரை