2.85 பொது - கோளறு திருப்பதிகம் - பியந்தைக்காந்தாரம்
 
2388. வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக
                                              நல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என்
                                          உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி,
                                     சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                அவர்க்கு மிகவே.
1
உரை
   
2389. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க,
                                           எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே
                                                   புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும்,
                                     உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
2
உரை
   
2390. உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து,
                 உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என்
                                            உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை
                                             தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
3
உரை
   
2391. மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும்
                                                   எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என்
                                           உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு
                                             நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                 அவர்க்கு மிகவே.
4
உரை
   
2392. நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை
                                               ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என்
                                            உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை
                                              ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
5
உரை
   
2393. வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்
                                             தனோடும் உடன் ஆய்,
நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் உளமே
                                                   புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
                                             கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
6
உரை
   
2394. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு
                                             செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
                                            உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும், வினை
                                                ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
7
உரை
   
2395. வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
                             மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் உளமே
                                                  புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும் இடர் ஆன
                                                     வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார்
                                                 அவர்க்கு மிகவே.
8
உரை
   
2396. பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
                                                   எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என் உளமே
                                                   புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலம்
                                                     ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல அடியார்
                                                  அவர்க்கு மிகவே.
9
உரை
   
2397. கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய
                                                   வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் உளமே
                                                   புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
                                           திருநிரு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
                                                          மிகவே.
10
உரை
   
2398. தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல்
                   துன்னி, வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறைஞான
                                                 ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத
                                           வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசு
                                         ஆள்வர்; ஆணை நமதே.
11
உரை