2.99 திருக்கோடிகா - நட்டராகம்
 
2539. இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போக விட்டுப் போதுமின்!
மின் தயங்கு சோதியான் வெண்மதி, விரிபுனல்,
கொன்றை, துன்று சென்னியான் கோடி காவு சேர்மினே!
1
உரை
   
2540. அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்,
நல்லது ஓர் நெறியினை நாடுதும், நட(ம்)மினோ!
வில்லை அன்ன வாள் நுதல் வெள்வளை ஒர் பாகம் ஆம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடி காவு சேர்மினே!
2
உரை
   
2541. துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்,
தக்கது ஓர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்!
அக்கு அணிந்து, அரைமிசை, ஆறு அணிந்த சென்னி மேல்
கொக்கு இறகு அணிந்தவன் கோடி காவு சேர்மினே!
3
உரை
   
2542. பண்டு செய்த வல்வினை பற்று அறக் கெடும் வகை
உண்டு; உமக்கு உரைப்பன், நான்; ஒல்லை நீர் எழுமினோ!
மண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஒர்பாகமாக்
கொண்டு உகந்த மார்பினான் கோடி காவு சேர்மினே!
4
உரை
   
2543. முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர், எழு(ம்)மினோ!
பொன்னை வென்ற கொன்றையான், பூதம் பாட ஆடலான்,
கொல் நவிலும் வேலினான், கோடி காவு சேர்மினே!
5
உரை
   
2544. ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் எனப்
பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை;
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடி காவு சேர்மினே!
6
உரை
   
2545. ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர்,
மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்மினோ!
பூணல் வெள் எலும்பினான், பொன்திகழ் சடை முடிக்
கோணல் வெண்பிறையினான், கோடிகாவு சேர்மினே!
7
உரை
   
2546. மற்று இ(வ்) வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து
                                                           நீர்,
பற்றி வாழ்மின், சேவடி! பணிந்து வந்து எழுமினோ!
வெற்றி கொள் தசமுகன், விறல் கெட இருந்தது ஓர்
குற்றம் இல் வரையினான் கோடி காவு சேர்மினே!
8
உரை
   
2547. மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்;
செங்கண் மால், திசைமுகன், சென்று அளந்தும் காண்கிலா
வெங் கண் மால்விடை உடை வேதியன் விரும்பும் ஊர்,
கொங்கு உலாம் வளம் பொழில், கோடி காவு சேர்மினே!
9
உரை
   
2548. தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்,
பட்டு உடை விரி துகிலினார்கள், சொல் பயன் இலை;
விட்ட புன் சடையினான், மேதகும் முழவொடும்
கொட்டு அமைந்த ஆடலான், கோடிகாவு சேர்மினே!
10
உரை
   
2549. கொந்து அணி குளிர்பொழில் கோடி காவு மேவிய
செந்தழல் உருவனை, சீர்மிகு திறல் உடை
அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம்
பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே.
11
உரை