2.103 திருஅம்பர்மாகாளம் - நட்டராகம்
 
2583. புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடிப் போழ் இளமதி
                                                           சூடி,
பில்கு தேன் உடை நறு மலர்க் கொன்றையும் பிணையல்
                                                  செய்தவர் மேய
மல்கு தண் துறை அரிசிலின் வடகரை, வருபுனல் மாகாளம்,
அல்லும் நண் பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை
                                                    அடையாவே.
1
உரை
   
2584. அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி அதள்; அங்கையில்
                                                    அனல் ஏந்தி,
இரவும் ஆடுவர்; இவை இவர் சரிதைகள்! இசைவன,
                                                       பலபூதம்;
மரவம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்,
                                                       மாகாளம்
பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன்
                                                  தலைப்படுவாரே.
2
உரை
   
2585. குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரைகழல் அடி
                                                           சேரக்
கணங்கள் பாடவும், கண்டவர் பரவவும், கருத்து அறிந்தவர்
                                                           மேய
மணம் கொள் பூம்பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை
                                                     அடையாவே.
3
உரை
   
2586. எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
                                                    நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
                                                            மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
                                                      உடையாரே.
4
உரை
   
2587. நெதியம் என் உள? போகம் மற்று என் உள? நிலம்மிசை
                                                       நலம் ஆய
கதியம் என் உள? வானவர் என் உளர்? கருதிய பொருள்
                                                           கூடில்
மதியம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்,
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல்
                                                    புரிந்தோர்க்கே.
5
உரை
   
2588. கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர்
                                                          நாகம்,
தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர்
                                                           மேய
மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில்
                                                      உயர்வாரே.
6
உரை
   
2589. தூசு தான் அரைத் தோல் உடை, கண்ணி அம் சுடர்விடு
                                                    நறுங்கொன்றை,
பூசு வெண்பொடிப் பூசுவது, அன்றியும், புகழ் புரிந்தவர்
                                                            மேய
மாசு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                         மாகாளம்
பேசு நீர்மையர் யாவர், இவ் உலகினில் பெருமையைப்
                                                       பெறுவாரே.
7
உரை
   
2590. பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன் தனைப் பருவரைக்
                                                       கீழ் ஊன்றி,
எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள் செய்த
                                      இறையவன் உறை கோயில்
மவ்வம் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                         மாகாளம்
கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனல் இடைச்
                                                   செதிள் அன்றே!
8
உரை
   
2591. உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்! ஒளி கிளர்
                                                      மலரோனும்,
பை கொள் பாம்பு அணைப்பள்ளி கொள் அண்ணலும்,
                                               பரவ நின்றவர் மேய
மை உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                        மாகாளம்
கையினால் தொழுது, அவலமும் பிணியும் தம் கவலையும்
                                                      களைவாரே.
9
உரை
   
2592. பிண்டிபாலரும், மண்டை கொள் தேரரும், பீலி கொண்டு
                                                    உழல்வாரும்,
கண்ட நூலரும், கடுந் தொழிலாளரும், கழற நின்றவர் மேய
வண்டு உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
                                                      மாகாளம்,
பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அறப் பரவுதல்
                                                    செய்வோமே.
10
உரை
   
2593. மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.
11
உரை