2.104 திருக்கடிக்குளம் - நட்டராகம்
 
2594. பொடி கொள் மேனி வெண் நூலினர், தோலினர், புலி உரி
                                                    அதள் ஆடை,
கொடி கொள் ஏற்றினர், மணி, கிணின் என வரு குரை
                                              கழல் சிலம்பு ஆர்க்க,
கடி கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
                                                   கற்பகத்தை, தம்
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை
                                                         மூடாவே.
1
உரை
   
2595. விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா
                                விகிர்தனை, விழவு ஆரும்
மண்களார் துதித்து அன்பராய் இன்பு உறும் வள்ளலை,
                                                       மருவி, தம்
கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு
                                                      கற்பகத்தைப்
பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ்
                                                          ஆமே.
2
உரை
   
2596. பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது, புலி அதள் உடை,
                                                          நாகம்
தங்க மங்கையைப் பாகம் அது உடையவர், தழல் புரை
                                                      திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர், கடிக்குளத்து உறைதரு
                                                      கற்பகத்தை,
எங்கும் ஏத்தி நின்று இன்பு உறும் அடியரை இடும்பை
                                                வந்து அடையாவே.
3
உரை
   
2597. நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை,
                                                   நிகர் இல்லாப்
பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை,
                                    பசும்பொன்னை, விசும்பு ஆரும்
கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
                                                கற்பகம் தன்னை,
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது
                                                  திணம் ஆமே.
4
உரை
   
2598. சுரும்பு சேர் சடைமுடியினன், மதியொடு துன்னிய தழல்
                                                          நாகம்,
அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர்பல கொண்டு
                                               அடியவர் போற்றக்
கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு
                                                     கற்பகத்தை,
விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி
                                                உடையவர் தாமே.
5
உரை
   
2599. மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு, அலைபுனல், அழல்,
                                                           நாகம்,
போது இலங்கிய கொன்றையும், மத்தமும், புரிசடைக்கு
                                                      அழகு ஆக,
காது இலங்கிய குழையினன்; கடிக்குளத்து உறைதரு
                                                       கற்பகத்தின்
பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அறக்
                                                    கெடும் அன்றே.
6
உரை
   
2600. குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம், பல குளிர்
                                                       பொய்கை,
உலவு புள் இனம், அன்னங்கள் ஆலிடும், பூவை சேரும்
                                                         கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும்
                                                 கற்பகத்தைச் சீர்
நிலவி நின்று நின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லா
                                                         தானே.
7
உரை
   
2601. மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன் மேல் மதி
                                                  இலாமையில் ஓடி
எடுத்தலும், முடிதோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல்
                                                          ஊன்ற,
கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட, கடிக்குளம் தனில்
                                                         மேவிக்
கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம்
                                                உடையவர் தாமே.
8
உரை
   
2602. நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு, நிகழ் அடி
                                                     முடி காணார்;
பாரின் ஆர் விசும்பு உற, பரந்து எழுந்தது ஓர் பவளத்தின்
                                                        படி ஆகி,
காரின் ஆர் பொழில் சூழ் தரு கடிக்குளத்து உறையும்
                                                   கற்பகத்தின் தன்
சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களைத் தீவினை
                                                      அடையாவே.
9
உரை
   
2603. குண்டர் தம்மொடு சாக்கியர் சமணரும், குறியினில் நெறி
                                                         நில்லா
மிண்டர் மிண்டு உரை கேட்டு, அவை மெய் எனக்
                                       கொள்ளன் மின்! விடம் உண்ட
கண்டர், முண்டம் நல் மேனியர், கடிக்குளத்து உறைதரும்
                                                        எம் ஈசர்,
        தொண்டர் தொண்டரைத் தொழுது அடி பணிமின்கள்! தூ
                                               நெறி எளிது ஆமே.
10
உரை
   
2604. தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல்
                                                       சம்பந்தன்
மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அது ஆய்,
                                                    மகிழ்வோடும்,
கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து
                                                     அமர்வானை,
இனம் மலிந்து இசை பாட வல்லார்கள், போய்
                                          இறைவனோடு உறைவாரே.
11
உரை