2.111 திருவாய்மூர் - நட்டராகம்
 
2670. தளிர் இள வளர் என உமை பாட, தாளம்(ம்) இட, ஓர்
                                                       கழல் வீசி,
கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து, ஆடும் வேடக்
                                                      கிறிமையார்;
விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு
                           அணிந்து, ஓர் சென்னியின் மேல்
வளர் இளமதியமொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
1
உரை
   
2671. வெந்தழல் வடிவினர்; பொடிப் பூசி, விரிதரு கோவண
                                                  உடைமேல் ஓர்
பந்தம் செய்து, அரவு அசைத்து, ஒலி பாடி, பல பல
                               கடைதொறும் பலி தேர்வார்;
சிந்தனை புகுந்து, எனக்கு அருள் நல்கி, செஞ்சுடர்
                                 வண்ணர் தம் அடி பரவ,
வந்தனை பல செய, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                     வருவாரே.
2
உரை
   
2672. பண்ணின் பொலிந்த வீணையர்; பதினெண் கணமும் உணரா
                                                            நஞ்சு
உண்ணப் பொலிந்த மிடற்றினார்; உள்ளம் உருகின் உடன்
                                                          ஆவார்;
சுண்ணப்பொடி நீறு அணி மார்பர்; சுடர் பொன் சடை
                                                  மேல் திகழ்கின்ற
வண்ணப் பிறையோடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                        வருவாரே.
3
உரை
   
2673. எரி கிளர் மதியமொடு எழில் நுதல்மேல், எறி பொறி
                                      அரவினொடு, ஆறு மூழ்க
விரி கிளர் சடையினர்; விடை ஏறி; வெருவ வந்து இடர்
                                               செய்த விகிர்தனார்;
புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த
                                    வாய்மையர்; பொன்மிளிரும்
வரி அரவு அரைக்கு அசைத்து, இவராணீர் வாய்மூர்
                                               அடிகள் வருவாரே.
4
உரை
   
2674. அஞ்சன மணிவணம் எழில் நிறமா அகம்மிடறு அணி
                                         கொள, உடல் திமில,
நஞ்சினை, அமரர்கள் அமுதம் என, நண்ணிய நறு நுதல்
                                                    உமை நடுங்க
வெஞ்சின மால்களியானையின் தோல் வெரு உறப்
                          போர்த்து, அதன் நிறமும் அஃதே,
வஞ்சனை வடிவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
5
உரை
   
2675. அல்லிய மலர் புல்கு விரிகுழலார் கழல் இணை அடி நிழல்
                                                      அவை பரவ,
எல்லி அம்போது கொண்டு எரி ஏந்தி, எழிலொடு தொழில்
                                          அவை இசைய வல்லார்;
சொல்லிய அருமறை இசை பாடி, சூடு இளமதியினர்; தோடு
                                                          பெய்து,
வல்லியந்தோல் உடுத்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                        வருவாரே.
6
உரை
   
2676. கடிபடு கொன்றை நன்மலர் திகழும் கண்ணியர்; விண்ணவர்
                                                   கன மணி சேர்
முடி பில்கும் இறையவர்; மறுகில் நல்லார் முறை முறை பலி
                                   பெய, முறுவல் செய்வார்;
பொடி அணி வடிவொடு, திரு அகலம் பொன் என
                               மிளிர்வது ஒர் அரவினொடும்,
வடி நுனை மழுவினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
7
உரை
   
2677. கட்டு இணை புதுமலர் கமழ் கொன்றைக்கண்ணியர்;
                               வீணையர்; தாமும் அஃதே;
எண் துணை சாந்தமொடு உமை துணையா, இறைவனார்
                             உறைவது ஒர் இடம் வினவில்,
பட்டு இணை அகல் அல்குல் விரிகுழலார் பாவையர் பலி
                                     எதிர் கொணர்ந்து பெய்ய,
வட்டணை ஆடலொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
8
உரை
   
2678. ஏனமருப்பினொடு எழில் ஆமை இசையப் பூண்டு, ஓர் ஏறு
                                                            ஏறி,
கானம் அது இடமா உறைகின்ற கள்வர்; கனவில் துயர்
                                                          செய்து
தேன் உண மலர்கள் உந்தி விம்மித் திகழ் பொன்
                                      சடைமேல் திகழ்கின்ற
வான நல்மதியினொடு, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                       வருவாரே.
9
உரை
   
2679. சூடல் வெண்பிறையினர்; சுடர் முடியர்; சுண்ண வெண்
                                     நீற்றினர்; சுடர் மழுவர்;
பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம்தார் பாம்பொடு
                                ;நூல் அவை பசைந்து இலங்க,
கோடல் நன் முகிழ்விரல் கூப்பி, நல்லார் குறை உறு பலி
                                   எதிர் கொணர்ந்து பெய்ய,
வாடல் வெண்தலை பிடித்து, இவராணீர் வாய்மூர் அடிகள்
                                                        வருவாரே.
10
உரை
   
2680. திங்களொடு அரு வரைப் பொழில் சோலைத் தேன் நலம்
                                          கானல் அம் திரு வாய்மூர்,
அங்கமொடு அருமறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்தம்
                                                      அடி பரவி,
நங்கள் தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன்
                                                    தமிழ் மாலை
தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி,
                                          உலகுக்கு ஓர் தவநெறியே.
11
உரை