2.116 திருநாகைக்காரோணம் - செவ்வழி
 
2725. கூனல் திங்கள் குறுங்கண்ணி கான்ற(ந்) நெடு வெண் நிலா,
வேனல் பூத்த(ம்) மராம் கோதையோடும் விராவும் சடை,
வான நாடன், அமரர் பெருமாற்கு இடம் ஆவது
கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
1
உரை
   
2726. விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான்,
இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது
மலங்கி ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
2
உரை
   
2727. வெறி கொள் ஆரும் கடல் கைதை, நெய்தல், விரி
                                                     பூம்பொழில்
முறி கொள் ஞாழல், முடப்புன்னை, முல்லை(ம்)முகை,
                                                     வெண்மலர்,
நறை கொள் கொன்றை(ந்), நயந்து ஓங்கு நாதற்கு இடம்
                                                         ஆவது
கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
3
உரை
   
2728. வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு
                                                         உடன்
கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு
உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
4
உரை
   
2729. வார் கொள் கோலம் முலை மங்கை நல்லார் மகிழ்ந்து
                                                       ஏத்தவே,
நீர் கொள் கோலச் சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு
                                                       எய்தவே,
போர் கொள் சூலப்படை புல்கு கையார்க்கு இடம் ஆவது
கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
5
உரை
   
2730. விடை அது ஏறி(வ்) விட அரவு அசைத்த விகிர்தர் அவர்,
படை கொள் பூதம்பல ஆடும் பரம் ஆயவர்,
உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம்
                                                         ஆவது
கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
6
உரை
   
2731. பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர்ப் பூசனை
செய்து வாழ்வார், சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார்,
எய்த வாழ்வார்; எழில் நக்கர்; எம்மாற்கு இடம் ஆவது
கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
7
உரை
   
2732. பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடிபத்து இற,
அத்து இரட்டி, விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது
மைத் திரட்டி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
8
உரை
   
2733. நல்ல போதில்(ல்) உறைவானும், மாலும், நடுக்கத்தினால்,
"அல்லர், ஆவர்" என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது
மல்லல் ஓங்கி(வ்) வரு வெண்திரை மல்கிய மால்கடல்
கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
9
உரை
   
2734. உயர்ந்த போதின்(ன்) உருமத்து உடை விட்டு
                                         உழல்வார்களும்,
பெயர்த்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும்,
நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது
கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.
10
உரை
   
2735. மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான்
நல்ல கேள்வித் தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன்
வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ்
சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே.
11
உரை