2892. |
கலையிலங்
கும்மழு கட்டங்கங் கண்டிகை குண்டலம் |
|
விலையிலங்
கும்மணி மாடத்தர் வீழி மிழலையார் |
|
தலையிலங்
கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம் |
|
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே. 4 |
4. பொ-ரை:மான்,
மழுப்படை, யோகதண்டம், உருத்திராக்கம், குண்டலம் முதலியன கொணடு, விலைமதிப்புடைய
மணிகளால்
அலங்கரிக்கப்பட்ட மாடங்களையுடைய திருவீழிமிழலையில் இறைவர்
வீற்றிருந்தருளுகின்றார். தலையிலே பிறைச் சந்திரன் திகழ,
கழுத்திலே எலும்புமாலை
விளங்க, கையில் சூலம், உடுக்கை
கொண்டு அலையுடைய கங்கையை ஏற்று இடபக்கொடி கொண்டு
விளங்குபவர். யோகநெறி நின்று தம்மைத் தொழும் அடியவர்களும்
தம்மைப் போன்ற உருவம் (சாரூப பதவி) பெறச் செய்வார். (ஒத்த
தோழர்கள் ஒன்று போல் அலங்கரித்துக் கொள்வது போல).
கு-ரை:கலை-மான்,
இலங்கும் மழு-ஒளிரும் மழு ஆயுதம்.
கட்டங்கம்-யோதண்டம். கண்டிகை-உருத்திராட்சக் கண்டிகை; தலை
தாழ்வடம். தமருகம்-உடுக்கை. அலை இலங்குபுனல்-அலையினால்
விளங்குகின்ற கங்கை. ஏற்றவர்-இடபக்கொடியுடையவர். இத்
திருப்பாசுரத்தில் சிவபெருமான் தன் அடியவர்களில் ஒருசார்
பக்குவமுடையோர்க்கும் சாரூப்பியபதவி அளிக்குந்திறன்
கூறப்படுகிறது. மேற்கூறியவை சிவபிராற்கு உரிய அடையாளங்கள்.
கட்டு அங்கம்-எலும்புமாலை. விலை யேறப்பெற்ற இரத்தினங்கள்
பதித்த மாடங்களால் நிறைந்த திருவீழிமிழலைய
ிலெழுந்தருளியிருப்பவரும் இடபக் கொடிடையுடைவருமாகிய
சிவபிரானுக்கு உரிய மான், மழு யோக தண்டம்,
உருத்திராக்கக்கண்டிகை, குண்டலம், தலைமாலை, எலும்பாலாகிய
தாழ்வடம், ஆலம், உடுக்கை, கங்கை ஆகிய இவை அவன்
அடியார்க்கும் உண்டு. சிவசின்னங்களாகிய இவைகள்
சாரூப்பியருக்கும் உண்டு. தலையிலங்கும் பிறை என்பதற்குத்
தலையில் விளங்கும் பிறை எனக்கொள்க. அதனால்
அனையவற்றிற்கும் கையிலிலங்கும் மான், மழு, கட்டங்கம், சூலம்,
தமருகம், கழுத்திலிலங்கும் கண்டிகை, தாழ்வடம், காதிலிலங்கும்
குண்டலம், தலையிலிலங்கும் புனல் எனக்கூறலுமாம். இனி,
நகுவெண்டலை என்பதற்குக் கையிலேந்திய கபாலம் எனவும்
கொள்ளலாம்.
|