2897.
|
திக்கமர்
நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட |
|
மிக்கமர்
தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே. 9 |
9. பொ-ரை:நான்கு
திக்குகளையும் நோக்குகின்ற
முகங்களையுடைய பிரமனும், திருமாலும் மேலுள்ள அண்டங்கள்
அனைத்திலும், கீழுள்ள அண்டங்களிலும் முடி, அடி தேட,
காணமுடியாவண்ணம், மிகுந்த எழும் தீப்பிழம்பாய் நின்றவர்
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான். அவர் சொக்கு
எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும் பூதகணங்கள்
சூழ விளங்கும் நக்கர், அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய
என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவராவர்.
கு-ரை:திக்கு
அமர் நான்முகன்-திக்கைப் போல் பொருந்திய
நான்கு முகங்களையுடைய பிரமனும். மாலும் முறையே அண்டம்
மண்தலம் தேடத் திரளாய் மிக்கவர். சொக்கம்-ஒரு கூத்து.
நக்கர்-ஆடையில்லாதவர். அவர் நாமமாகிய திருவைந்தெழுத்தை
உச்சரிப்போர் நல்லவர்-சிவபுண்ணியச் செல்வராவர். நான்முகன் மால்.
அண்டம் மண்தலம் தேட-நிரனிறை.
|