2960. நயந்தவர்க் கருள்பல நல்கி யிந்திரன்
  கயந்திரம் வழிபடநின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே              7

     7. பொ-ரை: விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன
வேண்டியவாறு அருளி, இந்திரனின் வெள்ளையானை வழிபட
அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான்
ஆவார். அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ?

     கு-ரை: கயந்திரம் வழிபட:-கஜேந்திரம் பூஜைசெய்ய. யானை
(கஜங்)களுக்குத் தலைமையுடையது கஜேந்திரம்.