3519. நிராமய பராபர புராதன
       பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை
     புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர
     பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு
     தராய்மொழி விராயபதியே.           6

     6. பொ-ரை: இறைவன் நோயற்றவன். அனைத்துப்
பொருட்கட்கும் மேலான பரம்பொருள். மிகப்பழமையானவன்.
பராவுசிவன் என்று இரவும், பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற
பழமை யானவன். தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும்
அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, இரணியாக்கனால்
கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை, திருமால்
பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி
உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி
அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க
பூந்தராய் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நிராமய - நோயற்றவனே. பராபர - உயர்வுடையதும்,
உயர்வற்றதும் ஆனவனே; புராதன - பழமையானவனே. பராவு -
அனை வரும் துதிக்கின்ற. சிவ - சிவனே. ராக - விரும்பத்
தக்கவனே. அருள் என்று - அருள் வாயாக என்று. இராவும் -
இரவிலும். எதிராயது - பகலினும். பரா - பரவி. நினை - உயிர்
அனைத்தும் தியானிக்கின்ற. புராணன் - பழமையானவனும். அமர
ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின். பதி -
இடமாகும். அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல். இராத -
இல்லாத. (இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த)
எழில் - அழகிய பூமியை. தரு - கொம்பினால் கொண்டு வந்த.
ஆய - அத்தகைமை பொருந்திய. அரபராயண - சிவனைத்
துதிக்கின்ற. வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட.
வாதராயனை - திருமாலை. விராய் - கலந்த. எரி - தீப்போன்ற
பழி நீங்குதற்பொருட்டு. பராய் - அவனால் வணங்கப் பட்டு.
(அதனால்) மிகு - புகழ்மிகுந்த. தராய் மொழி - பூந்தராய் என்னும்
பெயர். விராய - கலந்த, பதி ஆம். எழில் - ஆகுபெயர். பராயணன்
- குறுக்கல்விகாரம். விராயெரி - விராய எரி எனப்பிரிக்க.