3573. இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக
       ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன
     லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
     செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி
     பாடுநுகரா வெழுமினே.             4

     4. பொ-ரை: ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை
ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள்
துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த
சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய
திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட
எழுவீர்களாக.

     கு-ரை: இங்கு - இஞ்சி முதலிய குறிஞ்சி நிலப்
பொருள்களையும். கதிர் - ஒளியையுடைய (முத்தினொடு, பொன்,
மணிகள்) உந்தி - (அடித்துக் கொண்டு வரும்) நதியில். (உந்தி -
பெயர். இகரம் வினை முதற்பொருளில் வந்தது) எழில்மெய், (எழில்)
உள் உடனே - அழகிய தோற்றப் பொலிவோடும், அழகிய
மனத்தோடும். (மனத்திற்கு அழகாவது; தூய்மையுடைமை).
மங்கையர்களும் மைந்தர்களும் - மாதரும் ஆடவரும். மன்னு
புனல் ஆடி - நிலைபெற்ற நீரில்மூழ்கி. மகிழ் மாகறல் -
மகிழ்கின்ற திருமாகறல், உள்ளான். நுங்கள் - உங்கள். வினை
நீங்கும்படி. வழிபாடு நுகரா - வழிபாடு செய்து. எழுமின். மன்னு
புனல் என்றது அதனருகில் ஓடும் சேயாற்றினை.