3595. |
மாசின்மன நேசர்தம தாசைவளர் |
|
சூலதரன்
மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு
பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு
மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே. 4 |
4.
பொ-ரை: சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய
அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக
விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள
தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும்
விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும்
பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான்
இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை
மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை
போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள்
இறைவனைப் புகழும் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய
திருத்தேவூர் ஆகும்.
கு-ரை:
மாசில் மனநேசர் - களங்கமற்ற மனத்தையுடைய,
அடியார்கள் (தன்மேல் வைத்த) ஆசைவளர் - ஆசை
வளர்தற்குரிய. சூலதரன் - சூலத்தைத் தரித்தவனும். மேலை
இமையோர் ஈசன் - வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குத்
தலைவனும், மறைஓதி - வேதங்களை ஓதி அருளியவனும். எரி
ஆடி - அக்கினியில் ஆடியவனும், மிகு - வெற்றியை மிகுக்கும்.
பாசுபதன் - பாசுபத அஸ்திரத்தை யுடையவனும் ஆகிய
சிவபெருமான். மேவுபதிதான் - தங்கும் தலமாவது. வாசம் மலர்
- வாசனையுடைய மலர்களை. கோதுகுயில் - மூக்கால் கோதுகின்ற
குயில்களின். வாசகமும் - கூவுதலும். மாதரவர் - பெண்களின்
(மொழிவார்த்தையும்). பூவைமொழி - நாகண வாய்ப்புட்களின்
வார்த்தையும், தேசஒலி - வேறு நாட்டில் இருந்து வணங்க
வந்தவர்களின் ஓசையும், வீணையொடு - வீணையின் ஒலியுடன்
கூடிய. கீதமது - கீதங்களின் ஒலியும். வீதிநிறை - வீதிகளின்
நிறைகின்ற. (தேவூர் அது) இனி மாதரவர் பூவைமொழி என்பதற்குப்
பெண்கள் பூவைகளைப்பயிற்றும் மொழியின் ஓசையென்றும்,
பெண்களின் பூவைபோன்ற மொழியின் ஓசையென்றும் பொருள்
கோடலும் ஆம்.
|