3710. கோசர நுகர்பவர் கொழுகிய துவரன
       துகிலினர்
பாசுர வினைதரு பளகர்கள் பழிதரு
     மொழியினர்
நீசரை விடுமினி நினைவுறு நிமலர்த
     முறைபதி
பூசுரர் மறைபயி னிறைபுக ழொலிமலி
     புறவமே.                           10

     10. பொ-ரை: நீரில் சஞ்சரிக்கின்ற மீன்களை உணவாகக்
கொள்பவர்களும், துவர் தோய்க்கப்பட்ட ஆடையணிபவர்களாகிய
புத்தர்களும் ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறியாது வெறும் திருச்சிற்றம்பலம் பாட்டைப் பாடுதலாகிய தொழிலையுடைய குற்ற
முடையவர்கள். பிறரைப் பழித்துப் புறங்கூறும்
மொழிகளையுடையவர்கள் சமணர்கள், இவ்விருவகை நீசர்களை
விட்டு, சிவபெருமானைத் தியானியுங்கள். இயல்பாகவே பாசங்களின்
நீங்கியவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது, இப்
பூவுலக தேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் வேதங்களைப்
பயின்று இறைவனைப் புகழும் ஒலி மிகுந்த திருப்புறவம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: கோசரம் - நீரிற் சஞ்சரிக்கும் மீன்களை. நுகர்பவர் -
உண்பவர்களாகிய சமணர்களும். கோ - நீர். துவர் கொழுகியன -
மருதந்துவரால் தோய்த்தனவாகிய. (கொழுகிய கு, சாரியை) துகிலினர்
ஆடையை உடையவர்கள். பாசுர வினைதரு - (ஆரியத்தொடு
செந்தமிழ்ப்) பயனறிகிலாது வெறும்பாட்டைப் பாடுதலாகிய
தொழிலையுடைய. பளகர்கள் - பாவிகள். பழிதரு மொழியர் -
பிறரைப் பழித்துப் புறங்கூறும் மொழியை உடையவர்களுமாகிய.
நீசரைவிடும் - விடுங்கள் இனி. நினைவுறும் - தியானியுங்கள்.
நின்மலப் பொருளாகிய சிவபெருமானது உறையும்பதி - புறவமே.