3776. அயமுக வெயினிலை யமணருங்
       குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன
     சரிதைகள் செய்துழல்வார் 
கயலன வரிநெடுங் கண்ணியொ
     டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியா ரிரவிடத்
     துறைவர்வேள் விக்குடியே             10 
  

     10. பொ-ரை: பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல் சுடும்
வெயிலில் தவமென்று நிற்றலையுடைய சமணர்களும், குண்டர்களாகிய
புத்தர்களும், இன்முகத்தோடு நயமாகப் பேசி, நகைச்சுவை ததும்பும்
செயல்களைச் செய்து திரிபவர்கள். ஆதலால் அவர் உரைகளைக்
கொள்ளாதீர். கயல்மீன் போன்ற, அழகிய, வரிகளையுடைய நீண்ட
கண்களையுடைய உமாதேவியோடு பகலில் அகன்ற நகராகிய திருத்
துருத்தியில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இரவில் திருவேள்விக்
குடியில் வீற்றிருந்தருளுகின்றார். அவரை வழிபட்ட உய்வீர்களாக.

     கு-ரை: அயம் முகம் வெயில் - பழுக்கக்காய்ச்சிய இரும்பு
போற் சுடும் வெயிலில். நிலை (தவமென்று நிற்றலையுடைய)
துறவிகளாகிய அமணரும், குண்டரும், அவருள் இல்லறத்தாராகிய
கொடியோரும். சாக்கியரும் - புத்தரும், நயமுக உரையினர் -
விரும்பத்தக்க முகத்தோடு பேசுதலையுடையவர். நகைக்கத்தக்க
கதைகளைக் கட்டித் திரிபவர் ஆதலால் அவர் உரையையும்,
சரிதையையும் கொள்ளாது. துருத்தியார் வேள்விக் குடியிலிருப்பவர்,
அவர் அடி சார்ந்து உய்வீர்களாக என்க.